மாநில செய்திகள்

ஆழ்கடலுக்கு சென்ற படகுகள் கரை திரும்பின: மீன்பிடி தடைகாலம் தொடங்கியதுமீன் விலை கணிசமாக உயர வாய்ப்பு + "||" + The fishing ban started The price of fish is likely to rise

ஆழ்கடலுக்கு சென்ற படகுகள் கரை திரும்பின: மீன்பிடி தடைகாலம் தொடங்கியதுமீன் விலை கணிசமாக உயர வாய்ப்பு

ஆழ்கடலுக்கு சென்ற படகுகள் கரை திரும்பின: மீன்பிடி தடைகாலம் தொடங்கியதுமீன் விலை கணிசமாக உயர வாய்ப்பு
கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது. ஆழ்கடலுக்குள் சென்ற படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பின. வரக்கூடிய நாட்களில் மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது.
சென்னை,

கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம் நேற்று முன்தினம் (திங்கட் கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த மீன்பிடி தடைகாலம் 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். அந்தவகையில் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி நள்ளிரவுடன் தடைகாலம் முடிகிறது.


தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 591 மீன்பிடி கிராமங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கும் இந்த தடைகாலம் அமலில் இருக்கிறது.

இந்த பகுதிகளில் 150 முதல் 240 வரையிலான குதிரை திறன் கொண்ட சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பார்கள். தடைகாலமான இந்த நேரத்தில் இந்த 15 ஆயிரம் விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

அந்த வகையில் ஆழ்கடலுக்குள் சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரை திரும்பி இருக்கின்றன. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் கரையோரங்களில் அருகருகே நிறுத்திவைக்கப்பட்டு இருக் கின்றன.

மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் 60 நாட்களுக்கு மீனவர்கள் வேலை இழக்கிறார்கள். இந்த காலகட்டங்களில் கரையோரங்களில் நிறுத்தப்பட்டு இருக்கும் படகுகளை, அதன் உரிமையாளர்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.

கரை திரும்பிய விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு சென்று பிடித்து வந்திருந்த மீன்களை கொண்டு, இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும், அதன்பிறகு மீன்விலை கணிசமாக உயர வாய்ப்பு இருக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 படகுகள் நிறுத்துவதற்கான வார்ப்பு தான் இருக்கிறது. ஆனால் சுமார் 2 ஆயிரம் படகுகள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு நிறுத்தப்பட்டு இருப்பதால் உராய்வு ஏற்படும் என்றும், தற்போது கோடைகாலமாக இருப்பதால் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும், எனவே தடைகாலம் முடியும் வரை தீயணைப்பு வாகனம் ஒன்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகத்தில் நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்தார்.