பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி
பூந்தமல்லி அருகே வாகன சோதனையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி அருகே வாகன சோதனையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பூந்தமல்லியை அடுத்த ஜமீன் கொரட்டூர் பகுதியில் அதிகாரி செல்லபாண்டியன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
1,381 கிலோ தங்க கட்டி
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 3 வாகனங்களை, நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது, திருப்பதி தேவஸ்தானத்துக்கு 1,381 கிலோ தங்க கட்டிகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மீதம் உள்ள 2 வாகனங்களையும் திறந்து ஆய்வு செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த தங்க கட்டிகளை கொண்டு செல்வது தெரிந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தங்க கட்டிகளுடன் அந்த வாகனத்தை பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
விமானம் மூலம்
இதுகுறித்து விசாரணை செய்தபோது, திருப்பதி தேவஸ்தானம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பு நிதியில் முதலீடு செய்து இருந்தது. அதன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் நேற்று அந்த நிதியை கொண்டு சுவிட்சர்லாந்தில் இருந்து சுமார் 1,381 கிலோ எடைகொண்ட தங்க கட்டிகளை வாங்கி, விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து தனியார் நிறுவனம் மூலம் ஆந்திராவில் உள்ள வங்கிக்கு எடுத்து சென்று, பின்னர் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க எடுத்து செல்வது தெரியவந்தது.
ஒரு வாகனத்தில் 30 சிறிய பெட்டிகளும், மற்றொரு வாகனத்தில் 26 சிறிய பெட்டிகளிலும் தங்கம் இருப்பது தெரியவந்தது. ஒரு பெட்டியில் உள்ள தங்கத்தின் எடை 25 கிலோ என தெரியவந்தது.
தங்கம் பிடிபட்ட தகவல் அறிந்ததும், அது தங்களுடையதுதான் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அளித்து உள்ள ஆவணங்களை தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், அவை முறையாக பரிசோதனை செய்த பிறகு ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story