ஆண்டிப்பட்டியில் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
ஆண்டிப்பட்டியில் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் அளித்தார்.
சென்னை,
ஆண்டிப்பட்டியில் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் அளித்தார்.
இது குறித்து சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கனிமொழி வீட்டில்...
தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வீட்டில் பணம் இருப்பதாக அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு (கலெக்டர்) செல்போன் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. எனவே அந்த இடத்துக்கு செல்லும்படி பறக்கும் படைக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். வருமான வரித்துறையினருக்கும் அவர் தகவல் அளித்தார்.
வருமான வரித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று கனிமொழியின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அங்கு பணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அவர்கள் திரும்பிவிட்டனர்.
ஆண்டிப்பட்டி தொகுதி
அதுபோலவே ஆண்டிப்பட்டியிலும் (இடைத்தேர்தல் நடக்கும் சட்டமன்ற தொகுதி) மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் வந்தது. அவரும் பறக்கும் படை, வருமான வரித்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு ஏராளமான ஆட்கள் இருப்பதால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் போலீசார் சென்றனர்.
வருமான வரித்துறையினர் அங்கு சென்று பணத்தை பறிமுதல் செய்தனர். அங்கு இன்னும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பகட்ட தகவலின்படி, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கிடைத்திருக்கிறது. அதோடு, ஒரு நபரின் பெயருடன் கூடிய தபால் ஓட்டு ஒன்றும் அங்கு கிடைத்திருக்கிறது.
தேர்தல் நிறுத்தம்?
அந்த ஓட்டு இனி எண்ணப்படாது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். அந்த தபால் வாக்கை கொடுத்த அலுவலர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரித்துறை அதிகாரியிடம் இருந்து விளக்கமான அறிக்கை இன்னும் பெறப்படவில்லை. எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படுமா என்றெல்லாம் இப்போது கேட்க முடியாது. இதுபற்றி ஆரம்பகட்ட அறிக்கையை மட்டும் மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ளார். விளக்கமான அறிக்கை வந்த பிறகு பார்க்கலாம்.
முதல்-அமைச்சர் வீடியோ
ஒருவருக்கு முதல்-அமைச்சர் பணம் கொடுத்தது போன்ற வீடியோ வந்தது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியின் விளக்கம், ஒரு மணி நேரத்தில் அளிக்கப்பட்டது. வீடியோவை வெட்டி, பணம் கொடுப்பதை மட்டும் வெளியிட்டுள்ளனர். முழு வீடியோவில், அவர் ஒரு பொருளை வாங்கிவிட்டு அதற்கான தொகையை கொடுப்பது போல் உள்ளது. எவ்வளவு பணம் தரப்பட்டது என்ற தகவல் இல்லை.
வேலூர் தொகுதியில் ஏன் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பதை மிக நீளமான அறிக்கையாக இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து காரணங்களும் கூறப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story