விளாத்திகுளத்தில் காரில் கட்டுக்கட்டாக சிக்கிய ‘டோக்கன்’ சுயேச்சை வேட்பாளர்-டிரைவர் மீது வழக்கு


விளாத்திகுளத்தில் காரில் கட்டுக்கட்டாக சிக்கிய ‘டோக்கன்’ சுயேச்சை வேட்பாளர்-டிரைவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 April 2019 2:45 AM IST (Updated: 18 April 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், காரில் கட்டுக்கட்டாக ‘டோக்கன்’ சிக்கியது. இதுதொடர்பாக சுயேச்சை வேட்பாளர்-டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், காரில் கட்டுக்கட்டாக ‘டோக்கன்’ சிக்கியது. இதுதொடர்பாக சுயேச்சை வேட்பாளர்-டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வாகன சோதனை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலுடன், இடைத்தேர்தலும் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி விளாத்திகுளம் புதிய தாலுகா அலுவலகம் அருகே அம்பாள் நகரில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தினர்.

காரை சாலையோரமாக நிறுத்திய டிரைவர், காரில் இருந்த சில பண்டல்களை எடுத்து கொண்டு தப்பி ஓடினார். அவரை விரட்டிச் சென்றும் அதிகாரிகளால் பிடிக்க முடியவில்லை. அந்த காரை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக டோக் கன்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த டோக்கனின் ஒரு புறத்தில் அம்பாள் கோசாலை வழங்கும் காமதேனு திட்டம் என்றும், முன்னாள் எம்.எல்.ஏ.வும், விளாத்திகுளம் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மார்க்கண்டேயன் படமும், அவரது சின்னமான செருப்பு படமும், பார்கோடும் வரையப்பட்டு இருந்தன. அதன் மற்றொரு புறத்தில் முதியோர் உதவி திட்டம், மகப்பேறு உதவி திட்டம், திருமண உதவி திட்டம், கல்வி உதவி திட்டம், மருத்துவ உதவி திட்டம் என்று எழுதப்பட்டு இருந்தது.

3 பிரிவுகளில் வழக்கு

விசாரணையில், அந்த கார் மார்க்கண்டேயனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக விளாத்திகுளம் போலீசார் சுயேச்சை வேட்பாளர் மார்க்கண்டேயன், அவருடைய கார் டிரைவர் ராமராஜன் என்ற சரத் ஆகிய 2 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அ.தி.மு.க. சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததாலும், தொகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்படாததாலும் அக்கட்சியில் இருந்து, சுயேச்சையாக போட்டியிடுகிறார். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வகையில், இந்த டோக்கன்களை வினியோகம் செய்தாரா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story