வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர் 10 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
மதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார்.
மதுரை
மதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக வைகை ஆற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கள்ளழகர் இறங்குகிறார். இதையொட்டி மதுரையில் 10 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
கொடியேற்றம்
மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மீனாட்சி அம்மன் கோவில் விழாவையும், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவையும் இணைத்து, அதாவது சைவமும், வைணமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறப்பு மிக்க சித்திரை திருவிழா இந்தாண்டு கடந்த 8–ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் 15–ந்தேதி பட்டாபிஷேகமும், 16–ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும் (17–ந்தேதி), அதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டமும் நடந்தது. பின்னர் இன்று தீர்த்தவாரி நடக்கிறது.
கள்ளழகர் எதிர்சேவை
இதற்கிடையே வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் தரித்து தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் (17–ந் தேதி) மாலை 6 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி வந்த கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்நதல் வழியாக நேற்று காலை 6 மணி அளவில் மூன்றுமாவடியை அடைந்தார்.
அங்கு அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தாங்கள் வைத்திருந்த தோல் பைகளில் நிரப்பி இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர். எதிர்சேவை நிகழ்ச்சிக்கு பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், டி.ஆர்.ஓ.காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ் ரோடு, அவுட்போஸ்ட் பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகள் ஒவ்வொன்றிலும் எழுந்தருளினார். நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார்.
வைகை ஆற்றில் இறங்குகிறார்
அங்கு பெருமாள் திருமஞ்சனமாகி, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி கள்ளழகர் புறப்பட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார் இது சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாகும்.
அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னதாகவே வைகை ஆற்றுக்கு வீரராகவப்பெருமாள் வந்து, அவரை வரவேற்கிறார். ஆற்றில் இறங்கிய கள்ளழகர் காலை 7.25 மணி வரை அங்கேயே இருந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
10 லட்சம் பக்தர்கள்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசனம் செய்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வைகை ஆற்றுப்பகுதியில் நேற்று இரவில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அங்கு திரண்டனர். இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய அழகரை வர்ணனை செய்து ஆடிப்படி மகிழ்வார்கள். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி, சூடம் ஏற்றி பயப்பக்தியுடன் சாமி தரிசனம் செய்கிறார்கள். ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
சாபவிமோசனம்
வைகை ஆற்றில் இருந்து புறப்படும் கள்ளழகர், பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். மேலும் அழகர் வேடமணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. அங்கிருந்து புறப்படும் அழகர் இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகபெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார்.
நாளை (சனிக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு அங்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடக்கின்றன. நாளை காலை 11 மணியளவில் அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார். பின்னர் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில் அனுமன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் நடக்க உள்ளது.
தசாவதாரம்
அங்கிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபத்தில் இரவு 11 மணியளவில் எழுந்தருளுகிறார். அங்கு விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு அவதாரங்களில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்துடன் பக்தி உலா வருகிறார். பின்பு பகல் 12 மணிக்கு திருமஞ்சணமாகி அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்துடன் எழுந்தருளுகிறார்.
அன்று இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார். நள்ளிரவு 2.30 மணிக்கு கள்ளழகர் பூப்பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 22–ந்தேதி காலை 8.30 மணிக்கு கருப்பணசாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியான உடன் அழகர் மலைக்கு புறப்படுகிறார். செல்லும் வழியில் அன்று இரவு அப்பன்திருப்பதியில் திருவிழா நடக்கிறது. 23–ந்தேதி காலை 10.30 மணி அளவில் கள்ளழகர் அழகர்மலையில் தனது இருப்பிடத்தை அடைகிறார்.
தண்ணீர் திறப்பு
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்காக நேற்றுமுன்தினம் மாலையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதியம் 2 மணியளவில் மதுரை கோரிப்பாளையம் ஏ.வி. மேம்பாலத்தை கடந்து சென்றது. அந்த பகுதியில்தான் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் இறங்குகிறார். இதையடுத்து அங்கு சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பக்தர்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100–க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பக்தர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஹெலிகேமரா மூலமும் அழகர் ஆற்றில் இறங்கும் பகுதியை கண்காணிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story