கீழ் விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு: பாமக முன்னாள் அமைச்சர் வேலு உள்பட 50 பாமகவினர் மீது வழக்கு


கீழ் விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு: பாமக முன்னாள் அமைச்சர் வேலு உள்பட 50 பாமகவினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 April 2019 5:00 PM IST (Updated: 19 April 2019 5:00 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் வேலு உள்பட பாமகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டம் கீழ்விஷாரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில்  வாக்குப்பதிவு  சுமூகமாக  நடைபெற்று வந்தது. இந்த நிலையில்  மாலை 5 மணியளவில் பா.ம.க. முன்னாள் மத்திய அமைச்சர் வேலு மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் ஆகியோர் வாக்குச்சாவடியை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றனர்.அப்போது அங்கிருந்த போலீசார் கூட்டமாக செல்ல அனுமதி இல்லை என கூறி அவர்களை தடுத்ததாக கூறப்படுறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.வினர் வாக்குச்சாவடி முன்பு பெருமளவில் திரண்டனர். கூட்டத்தை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தும், யாரும் கலைந்து செல்லாததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டு அங்கிருந்த வாக்காளர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். எனினும், துப்பாக்கிச்சூடு காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடியில் கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்நிலையில் விதியை மீறி கீழ்விஷாரம் வாக்குச்சாவடியில் அதிக எண்ணிக்கையில் கூடியதாக ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளை மீறி 100 மீட்டருக்குள் கட்சி அடையாளத்தோடு வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. முன்னாள் மத்திய அமைச்சர் வேலு. பாமக முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன், பத்மநாபன் உள்ளிட்டோர் மீது விதியை மீறி கட்சி அடையாளங்களுடன் வந்தது, கூட்டம் சேர்த்தது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story