பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விபரீதம் ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை


பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விபரீதம் ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 19 April 2019 9:00 PM GMT (Updated: 2019-04-20T02:30:38+05:30)

அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தும் குறைந்த மதிப்பெண் பெற்றதால், ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை செய்துகொண்டனர்.

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அடுத்த கோதண்டராமபுரம் அருகே உள்ள கரைமேடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகள் காவ்யா (வயது 17). பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியிருந்த அவர், அதன் முடிவுக்காக காத்திருந்தார். இந்தநிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இதில் அனைத்து பாடங்களிலும் காவ்யா தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் குறைந்த மதிப்பெண் பெற்றதால், அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த காவ்யா, அழுதுகொண்டே வெளியேறினார்.

கடலூர்-சிதம்பரம் ரெயில்வே தண்டவாளத்தின் அருகில் அமர்ந்து, ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது கடலூர் மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரெயில் முன் காவ்யா பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி அறிந்ததும் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story