மத்தியில் காங்கிரசும், மாநில கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் வைகோ நம்பிக்கை


மத்தியில் காங்கிரசும், மாநில கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் வைகோ நம்பிக்கை
x
தினத்தந்தி 20 April 2019 2:45 AM IST (Updated: 20 April 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் காங்கிரசும், மாநில கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

ஆலந்தூர்,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பிரசாரம் செய்தபோது மக்களின் உற்சாகத்தையும், ஆதரவையும் கண்டேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம், புதுச்சேரி என அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றிபெறும்.

வேலூரில் தேர்தலை நிறுத்தி வைத்திருப்பது ஒருதலைபட்சமான முடிவு. வேலூரில் கண்டெடுக்கப்பட்ட பணம் தி.மு.க. வேட்பாளருக்கு சம்பந்தப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. வேலூர் தொகுதி தேர்தலை ரத்துசெய்தபோது, அதில்வரும் ஆம்பூர், குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலையும் ரத்துசெய்து இருக்க வேண்டியதுதானே.

கனிமொழி வீட்டில் சோதனை செய்தபோது எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. மோடியின் மத்திய அரசில் உள்ள புலனாய்வு துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரை கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டுவதும், அச்சுறுத்துவதுமாக உள்ளனர்.

ஆளும் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தபோதும் தேர்தல் பறக்கும் படை அங்கு செல்லவே இல்லை. ஆனால் இதையும் தாண்டி மக்கள் மனதில் மோடி, அ.தி.மு.க. அரசு மீது கடுமையான வெறுப்பு உள்ளது. அது மக்களை பாதித்து உள்ளதால் அவை தேர்தலில் பிரதிபலிக்கும்.

அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால்தான் உள்நாட்டில் தந்த வாக்குறுதியை பற்றி பேசாமல் பய உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பக்கத்து நாட்டை குறிப்பிட்டு பிரதமர் பிரசாரம் செய்கிறார். மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது.

மத்தியில் காங்கிரசும், மாநில கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்திரபாபு நாயுடு ஆதாரங்களுடன் பேசி வருகிறார். அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கிடையாது. வாக்குச்சீட்டு முறைதான் உள்ளது. சந்திரபாபு நாயுடு கூறுவதை அலட்சியப்படுத்த முடியாது. அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story