அரசியலில் குதிக்க ஆயத்தமாகிறார் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் “சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்” ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி


அரசியலில் குதிக்க ஆயத்தமாகிறார் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் “சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்” ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 20 April 2019 12:15 AM GMT (Updated: 19 April 2019 9:19 PM GMT)

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் ஈடுபடவேண்டும் என்று அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்கள்.

சென்னை,

இந்த நிலையில், கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடும் முன் அதற்காக வலுவான அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக அவர், தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்ற மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசுகையில், “நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம், வருகிற சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நாம் நிற்போம்” என்று கூறினார்.

அதன்பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு, நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை” என்று கூறி இருந்தார்.

இதனால் ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார்? என்று அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ‘அடுத்த ஓட்டு ரஜினிக்கே’ என்ற ‘ஹேஷ் டேக்’கை உருவாக்கி இந்திய அளவில் அதை பிரபலப்படுத்தினார்கள்.

தேர்தலில் வாக்களித்த ரஜினிகாந்த், மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று மும்பை சென்றார். மும்பை புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் வருமாறு:-

ஏமாற்ற மாட்டேன்

கேள்வி:- டுவிட்டரில், ‘அடுத்த ஓட்டு ரஜினிகாந்துக்குத்தான்’ என்று உங்கள் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனரே?

பதில்:- அவர்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. கண்டிப்பாக அவர்களை ஏமாற்ற மாட்டேன்.

கேள்வி:- தேர்தலில் வழக்கமான அளவுக்கு 70 சதவீத வாக்குப்பதிவே நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் பக்கம் குறை இருக்கிறதா? இல்லை தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையா?

பதில்:- 70 சதவீதம் என்பது நல்ல ஓட்டு பதிவுதான். சென்னையில் மட்டும் 55 சதவீதம் வாக்கு பதிவானதற்கு காரணம், தொடர்ச்சியான 4 நாட்கள் விடுமுறையில் மக்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என நினைக்கிறேன்.

கேள்வி:- வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- நிச்சயமாக நன்றாக இருக்கும்.

மோடி பிரதமர் ஆவாரா?

கேள்வி:- தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று உள்ளது. மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் கட்சி அறிவிப்பு இருக்குமா?

பதில்:- மே 23-ந் தேதிக்கு பிறகு முடிவு செய்யலாம்.

கேள்வி:- மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- மே 23-ந் தேதி தெரிந்துவிடப் போகிறது.

கேள்வி:- தேர்தலின் போது அரியலூரில் நடைபெற்ற வன்முறையை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- முன்பு நடைபெற்ற வன்முறை சம்பவங்களை விட இது மிகவும் குறைவுதான். கண்டிப்பாக இந்தமுறை மிகவும் நன்றாக செய்து இருக்கிறார்கள். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

தேர்தலை சந்திக்க தயார்

கேள்வி:- தேர்தலில் பணபரிமாற்றம் அதிக அளவில் நடைபெற்று இருப்பதாகவும், தேர்தல் கமிஷன் இதில் தோல்வி அடைந்து இருப்பதாகவும் கருத்துகள் இருக்கிறதே?

பதில்:- அதை தேர்தல் கமிஷன்தான் பார்க்க வேண்டும். அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

கேள்வி:- நீங்கள் தேர்தலை சந்திப்பதை எப்போது எதிர்பார்க்கலாம்?

பதில்:- எப்போது சட்டசபை தேர்தல் வருமோ அப்போது எதிர்பார்க்கலாம்.

கேள்வி:- தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று தி.மு.க. தரப்பில் கூறுகிறார்கள். ஒருவேளை மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்தால் நீங்கள் உடனடியாக சந்திக்க தயாரா?

பதில்:- எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்.

இவ்வாறு ரஜினிகாந்த் பதில் கூறினார்.

ஆயத்தமாகிறார்

சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று ரஜினிகாந்த் கூறி இருப்பது, அரசியலில் குதிக்க அவர் ஆயத்தமாகி வருவதையே காட்டுகிறது.

எனவே, அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் அவர் கட்சி தொடங்கி விடுவார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

Next Story