வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் ‘துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்’ அரசியல் கட்சியினர் கோரிக்கை


வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் ‘துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்’ அரசியல் கட்சியினர் கோரிக்கை
x
தினத்தந்தி 21 April 2019 11:00 PM GMT (Updated: 21 April 2019 11:01 PM GMT)

தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும் துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

பின்னர் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்குள் தாசில்தார் அனுமதியின்றி நுழைந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்தனர்.

பின்னர், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நேற்று முன்தினம் சம்பூர்ணம் என்ற தாசில்தார் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் 3 மணிநேரமாக இருந்துள்ளார். அவருடன் மேலும் 3 நபர்கள் இருந்துள்ளனர். அவர்களிடம் அடையாள அட்டையும் இல்லை.

3 மணி நேரத்துக்கு பிறகே போலீசார் இதை கண்டுபிடித்து தடுத்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தலையிட்டு அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். கலெக்டரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் வெங்கடேசன் நீண்ட நேரம் போராடிய பிறகும், கலெக்டர் அங்கு வரவில்லை.

கலெக்டர் அலுவலகம் சென்ற வேட்பாளர் கலெக்டரை சந்தித்து கேட்டதற்கு, தற்போது தான் தனக்கே தெரிகிறது என கலெக்டர் கூறி உள்ளார். இது நம்பத்தகுந்ததாக இல்லை. தபால் வாக்குகளில் முறைகேடுகள் செய்யவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் பாதுகாக்கப்பட்ட அறைக்குள் எவ்வாறு சென்றார்? அதை 3 மணி நேரம் வரை போலீசார் எப்படி கண்டுபிடிக்காமல் இருந்தனர்?

இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியை மாற்றி வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும். தமிழகத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களுக்கும் துணை ராணுவ பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.

தபால் வாக்குகள் வினியோகம், பதிவு எண்ணிக்கை ஆகியவற்றை கண்காணிக்க சிறப்பு பார்வையாளரை நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story