மாநில செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி + "||" + ADMK Candidate list Today interview is Palaniswamy interview

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எடப்பாடி பழனிசாமி பேட்டி
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.


தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு வினியோகம் நடந்தது.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மறைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மனைவி பாக்கியலட்சுமி, மகன்கள் சிவசுப்பிரமணியன், சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உள்பட 40 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் உள்பட 28 பேரும், சூலூர் தொகுதிக்கு மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் சகோதரர் கந்தசாமி உள்பட 31 பேரும், அரவக்குறிச்சி தொகுதிக்கு அ.தி.மு.க. பேச்சாளர் நிர்மலா பெரியசாமி உள்பட 20 போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

மொத்தம் 4 தொகுதிகளில் 119 பேரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.
விருப்ப மனு முடிந்த கையோடு வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் இ.மதுசூதனன், வைத்தியலிங்கம் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் வேட்பாளர் நேர்காணலை நடத்தினர்.

இதற்கிடையே அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ 4 தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கட்சி தலைமை அலுவலகத்தில் 22-ந்தேதி (இன்று) மாலை 4 மணிக்கு கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தித்தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் பேட்டி

இந்தநிலையில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நேர்காணல் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

இலங்கையில் நடைபெற்ற சம்பவம் வேதனை அளிக்கிறது. மிகுந்த கண்டனத்துக்குரியது. ஒட்டுமொத்த நாடே அதிர்ந்து போய் இருக்கிறது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது அந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் இந்திய அரசு தலையிட்டு இலங்கை அரசுக்கு துணை நிற்க வேண்டும். இப்படிப்பட்ட சம்பவம் இனி அங்கு நடைபெறாத வண்ணம் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று வேட்பாளர்கள் பட்டியல்

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் நேர்காணல் எவ்வாறு இருந்தது?

பதில்:- 4 தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். விருப்பமனு அளித்தவர்களை அழைத்து பேசி இருக்கிறோம். நாளை(இன்று) மாலை 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

கேள்வி:- தேர்தல் ஆணையம் சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைத்துள்ளதே?

பதில்:- தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிற அமைப்பு. தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கட்டுப்படுகிற சூழ்நிலை தான் இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி அதனை எதிர்க்கொள்ளும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வெற்றிவாய்ப்பு பிரகாசம்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்களுக்கு கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

பதில்:- 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்ற நல்ல செய்தி தேர்தல் முடிவு வந்தவுடன் வந்து சேரும். அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கேள்வி:- தேர்தலில் 72 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து இருக்கிறது. இதை அ.தி.மு.க. ஆட்சிக்கு சாதகமாக பார்க்கிறீர்களா?

பதில்:- அ.தி.மு.க. ஆட்சிக்கு சாதகமாகவே இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ளநிலையில், அ.ம.மு.க. வேட்பாளர்கள் பட்டியலும் இன்று தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.