திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்


திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்
x
தினத்தந்தி 22 April 2019 12:00 AM GMT (Updated: 21 April 2019 11:54 PM GMT)

திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்த தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர் மற்றும் கடலூர் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதனால் அந்த ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பொதுவாக அமைதியான நடந்து முடிந்தது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பெயர் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது, கையெழுத்து இல்லாமல் ஓட்டு போடப்பட்டு இருப்பது குறித்து அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

அதன் அடிப்படையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டியில் 8 வாக்குச்சாவடிகளுக்கும், திருவள்ளூர் மற்றும் கடலூரில் தலா ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பரிந்துரை செய்து உள்ளனர்.

அதாவது திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி சட்டசபை தொகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 195-வது எண் வாக்குச்சாவடியிலும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டசபை தொகுதியில் உள்ள அய்யம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 181 மற்றும் 182-வது எண் வாக்குச்சாவடிகளிலும், நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 192, 193, 194, 195-வது எண் வாக்குச்சாவடிகளிலும், ஜல்லிபுதூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 196 மற்றும் 197-வது எண் வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் பரிந்துரை செய்து இருக்கிறார்கள்.

இதேபோல் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்ருட்டி சட்டசபை தொகுதியில் உள்ள திருவதிகை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 210-வது எண் வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி கேட்டுக் கொண்டு உள்ளார்.

எனவே இதுகுறித்து விசாரித்து மேற்கண்ட 10 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப் பதிவு நடத்துமாறு தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிக் கப்பட்டு உள்ளது. இதனை ஏற்று தேர்தல் கமிஷன் எப்போது தேர்தல் நடத்துமாறு கூறுகிறதோ அப்போது மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

Next Story