மாநில செய்திகள்

பரமத்திவேலூர் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு + "||" + 6 dead drowned in the river Cauvery

பரமத்திவேலூர் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு

பரமத்திவேலூர் அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு
பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள், சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). புகைப்படக் கலைஞரான இவர் அங்கு போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஜோதிமணி (40). இவர்களுக்கு தாரகேஷ் (12), தீபகேஷ் (12) என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் இரட்டை குழந்தைகள் ஆவார்கள். இவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளனர்.

ஜோதிமணியும், ஜேடர்பாளையத்தை சேர்ந்த தேவிஸ்ரீயும் (32) தோழிகள். தற்போது தேவிஸ்ரீ சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள தனது கணவர் கார்த்திக்குடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஹஸ்விகா (8) என்ற மகள் இருந்தாள்.

இந்த நிலையில் நேற்று தேவிஸ்ரீ தனது மகள் ஹஸ்விகாவுடன் பொத்தனூரில் உள்ள ஜோதிமணி வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். பின்னர் காலை 9 மணி அளவில் சரவணன் குடும்பத்தினர் மற்றும் தேவிஸ்ரீ, அவரது மகள் ஹஸ்விகா ஆகியோரும், சரவணனின் அண்ணன் தனசேகரனின் மகன் ரோகித் (12) என்ற சிறுவனும் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

தண்ணீரில் மூழ்கினர்

அங்கு ரோகித் உடைமைகளை கவனித்துக்கொண்டு கரையில் அமர்ந்து இருந்தான். சரவணன் உள்ளிட்ட 6 பேரும் ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது தாரகேஷ், தீபகேஷ் மற்றும் ஹஸ்விகா ஆகியோர் தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருந்த அவர்களை காப்பாற்ற சரவணன் மற்றும் ஜோதிமணி, தேவிஸ்ரீ ஆகியோரும் ஆழமான பகுதிக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கினர். சரவணன் உள்ளிட்ட அனைவரும் தண்ணீரில் மூழ்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் ரோகித் இதுகுறித்து செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தான்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த உறவினர்கள் பரமத்திவேலூர் போலீசாருக்கும், வேலாயுதம்பாளையம் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு ஒவ்வொரு உடலாக 5 பேரின் உடல்களையும் மீட்டனர். சிறுமி ஹஸ்விகா உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பின்னர் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் அனுதாபம்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளோடு நீர்நிலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் குளிக்க செல்லும்போது காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த துயர சம்பவத்தில் உயிர் இழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.