வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்


வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 23 April 2019 11:30 PM GMT (Updated: 23 April 2019 9:51 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும், ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டு இருந்தது. அந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் பெயர் இல்லாமலேயே அவர் தவறுதலாக வாக்களித்ததாக அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். இதில், சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்டால், அவரை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

கள்ள ஓட்டா?

சிவகார்த்திகேயன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது சரியான கேள்விதான். அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. அதைப் பார்த்து அவரை உள்ளே அனுப்பி இருக்கலாம். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. இதை கவனிக்காமல் அனுமதித்திருக்கலாம்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் அவர் ஓட்டு போட்டுள்ளார். அந்த ஓட்டு கழிக்கப்படுமா?, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி என்ற நிலை வந்தால் என்ன செய்வது? என்று கேட்டால், அதுபற்றி பின்னர் பார்க்கலாம். அது கள்ள ஓட்டாக என்று எடுத்துக்கொள்ளலாமா என்றால், இதில் தவறு செய்தவர்கள் யார்-யார் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதன்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அவரது பெயர் ஏன் நீக்கப்பட்டது?, எப்போது நீக்கப்பட்டது? என்ற விளக்கத்தை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டிருக்கிறேன். அவர் வேறு வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தாரா? என்பதுபற்றி தெரியவில்லை.

நடிகர் ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்த், வாக்குச்சாவடிக்குச் சென்றிருக்கிறார். ஆனால் வாக்களிக்கவில்லை என்று மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள வாக்கு எண்ணிக்கை மையங் களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். அங்குள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு சி.சி.டி.வி. இருக்கும். அதை அரசியல் கட்சிகளின் முகவர்களும் பார்க்கலாம்.

மாவட்ட அதிகாரி மாற்றமா?

மதுரையில், தற்போதுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரியை வைத்து ஓட்டு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. மதுரை சம்பவத்தில் நடந்த தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு பிறகு முடிவு செய்யப்படும். இதுவரை சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரச்சினை என்றாலும், இறுதி முடிவை எடுக்க வேண்டியது இந்திய தேர்தல் ஆணையம்தான். மாவட்ட தேர்தல் அதிகாரி என்றாலும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி என்றாலும் அவர்களை இடமாற்றம் செய்யும் விஷயத்திலும் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பெயர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டு இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையை கேட்டுப் பெற்றிருக்கிறேன்.

கடந்த செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை அந்த மாவட்டத்தில் மொத்தம் 10 ஆயிரம் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. இது அதிகாரப்பூர்வமான பட்டியல். எனவே ஒரு லட்சம் பெயர் நீக்கம், 50 ஆயிரம் பெயர் நீக்கம் என்பதெல்லாம் சரியல்ல. புதிதாக 55 ஆயிரம் பெயர் கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story