தி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி; மு.க. ஸ்டாலின்


தி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி; மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 April 2019 3:48 AM GMT (Updated: 28 April 2019 3:48 AM GMT)

தி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்தவர் வசந்தி ஸ்டான்லி என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி (வயது 56), நேற்று திடீரென மரணம் அடைந்தார். உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த அவர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தி.மு.க. சார்பில் கடந்த 2008–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வசந்தி ஸ்டான்லி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

சென்னை ராயப்பேட்டையில் லாய்ட்ஸ் காலனி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், தி.மு.க.வின் செயல் வீராங்கனையாக இருந்த அவரது மறைவால் துயரமடைந்தேன்.  வசந்தி ஸ்டான்லியின் மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி தி.மு.க.வுக்கே பேரிழப்பு.

தி.மு.க.வின் கொள்கைகளை, கருத்துகளை நாடு முழுவதும் எடுத்து செல்ல கூடிய சிறந்த பெண்மணி அவர்.  கழகத்தின் கருவூலம் என கருணாநிதியால் புகழப்பட்டவர்.  கவிஞர், எழுத்தாளர், தி.மு.க.வின் பேச்சாளராக இருந்தவர்.  அவரது மறைவுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

Next Story