தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களா? இலங்கையை சேர்ந்த 3 பேர் பூந்தமல்லியில் சுற்றிவளைப்பு கியூ பிரிவு போலீசார் அதிரடி


தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களா? இலங்கையை சேர்ந்த 3 பேர் பூந்தமல்லியில் சுற்றிவளைப்பு கியூ பிரிவு போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 1 May 2019 5:30 AM IST (Updated: 1 May 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையை சேர்ந்த 3 பேர் நேற்று இரவு பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுற்றிவளைக்கப்பட்டனர். தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் மரணம் அடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இலங்கையிலேயோ அல்லது அண்டை நாடுகளிலேயோ பதுங்கி இருக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கைக்கு மிக அருகேயுள்ள தமிழகத்தில் இந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த யாரேனும் தங்கியுள்ளனரா? என்றும் கடந்த சில நாட்களாக சோதனை நடந்து வருகிறது. சந்தேகத்துக்கிடமானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் நெருங்கிய நண்பர் ஹசன் என்பவர் சென்னை மண்ணடிக்கு வந்து சென்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினரும், கியூ பிரிவு போலீசாரும் இணைந்து பயங்கரவாதிகளை பிடிக்கும் வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நேற்று மண்ணடியில் உள்ள ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள கோல்டன் அபார்ட்மெண்ட்டில் ரகசியமாக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் அங்கேயே தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் இலங்கையில் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? எதற்காக இங்கே வந்து தங்கியிருக்கிறார்கள்? பாஸ்போர்ட்-விசா உள்ளிட்ட ஆவணங்களை முறையாக வைத்திருக்கிறார்களா? என்று கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணைக்கு பிறகு இவர்களுக்கும், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது தெரியவரும். ஆனால் விசாரணை நடப்பதை ஒத்துக்கொண்ட கியூ பிரிவு போலீசார் பிடிபட்ட 3 பேரின் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Next Story