தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான முதல்நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை


தமிழகம், புதுச்சேரியில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான முதல்நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை
x
தினத்தந்தி 2 May 2019 5:24 AM IST (Updated: 2 May 2019 5:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான முதல்நிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

சென்னை,

மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வை சென்னை ஐகோர்ட்டு நடத்தி வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெறுபவர்கள் மாவட்ட நீதிபதி பதவிக்கு தகுதியானவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

அந்தவகையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 30 மாவட்ட நீதிபதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு மாவட்ட நீதிபதி என மொத்தம் 31 மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான அறிவிப்பை சென்னை ஐகோர்ட்டு (தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவை) வெளியிட்டது.

இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடைபெற்றது. தேர்வுக்கான வினாத்தாள்களை ஐகோர்ட்டு நீதிபதிகள் குழுவினர் தயார் செய்து இருந்தனர்.

தமிழ்நாட்டில் இருந்து 3 ஆயிரத்து 562 பேரும், புதுச்சேரியில் இருந்து 558 பேரும் என மொத்தம் 4 ஆயிரத்து 120 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். முதல்நிலை தேர்வு தாள்-1, தாள்-2 என்று 2 பிரிவாக பிரித்து கடந்த மாதம் 7-ந்தேதி காலையும், மதியமும் என நடந்தது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வுகள் நடந்தன.

இதில் பொதுப்பிரிவினர் 120 மதிப்பெண்களும், பி.சி., எம்.பி.சி. உள்பட பிற பிரிவினர் 105 மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 90 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். தவறாக எழுதும் வினாக்களுக்கான மதிப்பெண் குறைக்கப்படும்(நெகட்டிவ் மதிப்பெண்) என்ற விதிமுறையும் இருந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களில் 450-க்கும் மேற்பட்ட சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகளும் அடங்குவர். மற்றவர்கள் அனைவரும் வக்கீல்களுக்கு படித்தவர்கள் ஆவர்.

முதல்நிலை தேர்வு நடைபெற்று முடிந்து 2 வாரங்கள் கழித்து முடிவு வெளியிடப்பட்டது. 4 ஆயிரத்து 120 பேர் எழுதிய இந்த தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இது அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக, தேர்வு எழுதியவர்களில் சுமார் 98 சதவீதம் பேர் வினாக்களுக்கு தவறான பதில் அளித்ததற்காக ‘நெகட்டிவ்’ மதிப்பெண்களை பெற்று இருக்கின்றனர்.

முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வு மிகவும் கஷ்டமாக கேட்டு இருந்ததாகவும், ஆகவே மதிப்பெண் எடுக்க முடியாமல் போனதாகவும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

முதல்நிலை தேர்வில் யாரும் தேர்ச்சி பெறாத காரணத்தினால், அடுத்தகட்டமான முதன்மை தேர்வுக்கு செல்வதற்கு யாருக்கும் வாய்ப்பு இல்லை. எனவே முதல்நிலை தேர்வை மீண்டும் நடத்த வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான தேர்வை சென்னை ஐகோர்ட்டு கடந்த 2005-ம் ஆண்டும், 2014-ம் ஆண்டும் நடத்தி இருக்கிறது. இந்த 2 ஆண்டுகளிலும் நடந்த தேர்வுகளில் தலா 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று எழுதினர். அதில் 2005-ம் ஆண்டு 16 பேரும், 2014-ம் ஆண்டு 23 பேரும் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story