திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிலை திருட்டை தடுக்கவே கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கொடுத்தேன் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் கருத்து


திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிலை திருட்டை தடுக்கவே கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கொடுத்தேன் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் கருத்து
x
தினத்தந்தி 3 May 2019 3:30 AM IST (Updated: 3 May 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிலை திருட்டை தடுக்கவே கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கொடுத்தேன் என்று தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் கூறினார்.

சென்னை,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மூலவர் சிலைக்கு முன்புறம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லினால் செதுக்கப்பட்ட மயில் சிலை ஒன்று இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சிலை சேதமடைந்ததாகவும், அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் கூறி வெளியே எடுத்துவரப்பட்டது. பின்னர் அந்த சிலையை திருடிவிட்டு, அங்கு போலியான மயில் சிலையை தயாரித்து வைத்தனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள மயில் சிலை திருடுபோனது குறித்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நரசிம்ம ரங்கராஜன் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனால் பயந்துபோன சிலை திருட்டு கும்பல் 15-வது நாளிலேயே மயில் சிலையை அதே இடத்தில் மீண்டும் வைத்துவிட்டது.

6 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்செந்தூர் கோவிலில் மயில் சிலையை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருட முயன்றது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கடந்த 10 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்த விசாரணையில் மயில் சிலையை திருட முற்பட்டது உறுதியானது. இந்த சம்பவத்தில், கோவிலில் இணை ஆணையராக இருந்த பரஞ்சோதி உள்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் திருச்செந்தூர் போலீசில் இந்த சிலை கடத்தல் முயற்சி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரா.கண்ணன் ஆதித்தன் கருத்து

இதுகுறித்து திருச்செந்தூர் முருகன் கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் கூறியதாவது:-

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவே நான் தக்காராக பதவியேற்றதும் கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கொடுத்தேன். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story