பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: மேலும் 3 பேர் கைதாகிறார்கள் சி.பி.ஐ. விசாரணை தீவிரம்


பொள்ளாச்சி பாலியல் விவகாரம்:  மேலும் 3 பேர் கைதாகிறார்கள்  சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 2 May 2019 10:15 PM GMT (Updated: 2 May 2019 7:28 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்களிடம் சி.பி.ஐ. போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்களிடம் சி.பி.ஐ. போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைதாகலாம் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் பலாத்கார விவகாரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சி.பி.ஐ. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் பொள்ளாச்சி மற்றும் கோவையில் முகாமிட்டு விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.

பெண்களிடம் விசாரணை

இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய பயன்படுத்தப்பட்ட சின்னப்பம்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டிலும் சி.பி.ஐ. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சியில் சி.பி.ஐ. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைமணி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜயா, வைஷ்ணவி ஆகியோர் பாதிக்கப்பட்ட 2 பெண்களின் வீட்டிற்கு நேற்று சென்று அவர்களை அழைத்து சென்றனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் 3 பேர் கைதாகிறார்கள்?

அப்போது அந்த பெண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்று சில திடுக்கிடும் தகவல்களை சி.பி.ஐ. போலீசாரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கொடுத்த ஆதாரங்களிலும் 3 பேர் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைதாவார்கள் என்று தெரிகிறது.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துள்ளதால் பொள்ளாச்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் பீதி அடைந்து உள்ளனர்.

Next Story