என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடங்கியது

என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஆன்லைனில் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.
சென்னை,
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஆன்லைனில் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பித்தனர்.
என்ஜினீயரிங் சேர்க்கை
2019-20-ம் கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக். ஆகிய என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு மே 2-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. www.tne-a-o-n-l-i-ne.in, www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் மே 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையதள வசதி இல்லாதவர்களுக்காக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் தமிழகத்தில் 43 இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மையங்களுக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.
முதல் நாளில்...
முதல் நாளில் மாணவ-மாணவிகள் பலர் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்தனர். இணையதள வசதி உள்ளவர்கள் வீட்டில் இருந்தும், மற்றவர்கள் சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். முதல் நாளான நேற்று பகல் 1 மணி வரை 8,392 பேர் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறியதாவது:-
ஆன்லைனில் என்ஜினீயரிங் சேர்க்கை விண்ணப்பிப்பதற்கான இணையதளம் செயல்படத் தொடங்கிவிட்டது. மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்காக தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையங்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அங்கு அனைத்து உதவிகளும் இலவசமாக செய்துதரப்படும்.
1.80 லட்சம் எதிர்பார்ப்பு
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் என்ஜினீயரிங் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் இருக்கிறது. அதைப் பார்த்து மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம். ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். காலியிடங்கள் பற்றிய தகவல்கள் வருகிற 15-ந்தேதி தான் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






