திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா திருச்சி அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
திருச்சி,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா திருச்சி அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக பல மணி நேரம் சோதனை நடத்தினர்.
பா.ம.க. பிரமுகர் கொலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம், இஸ்லாமிய மதமாற்றத்தில் சிலர் ஈடுபட்டனர். அதை அங்கு பாத்திரகடை நடத்தி வந்த, திருப்புவனம் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளரான ராமலிங்கம் (வயது 45) என்பவர் தட்டிக்கேட்டார். அவரை ஒரு கும்பல் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி படுகொலை செய்தது.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். மேலும் கொலையாளிகள் பயன்படுத்தியதாக கூறப்பட்ட கார் ஒன்று, ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட சில நாட்களில் திருச்சி மாநகரில் பிரபாத் தியேட்டர் அருகே விடப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்து மீட்டனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு முகமையில் இடம் பெற்ற கேரள மாநிலத்தை சேர்ந்த கூடுதல் சூப்பிரண்டு சவுகத் அலி தலைமையிலான 5 பேர் குழு, ராமலிங்கம் கொலை வழக்கு பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சியில் அதிரடி சோதனை
இந்தநிலையில் திருச்சி பாலக்கரை மதுரை சாலையில், பிரபாத் தியேட்டர் அருகே அமைந்துள்ள ‘ஜி.எம்.எஸ். காம்ப்ளக்ஸ்’ என்ற அடுக்கு மாடி கட்டிடத்தின் 2-வது தளத்தில் இயங்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு தேசிய புலனாய்வு முகமை கூடுதல் சூப்பிரண்டு சவுகத்அலி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 8 மணிக்கு அதிரடியாக வந்தனர். இதையொட்டி திருச்சி மாவட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வந்தபோது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் சித்திக் மற்றும் செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட 3 பேர் அந்த அலுவலகத்தில் இருந்தனர். மேலும் மாவட்ட தலைவர் முகமது இப்ராகிமை போலீசார் செல்போனில் தொடர்புகொண்டு விசாரணைக்கு அழைத்தனர். பின்னர் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குடிநீர் தொட்டிக்குள் ஆய்வு
அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து குறிப்பெடுத்து கொண்டனர்.
மேலும் அக்கட்டிடத்தின் பக்கத்து மாடியில்கூட யாரும் செல்லமுடியாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதியம் 1 மணிக்கு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்று அங்குள்ள குடிநீர் தொட்டியில் ஏறி, தொட்டிக்குள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் ஏதேனும் தடயம் சிக்கியதா? அல்லது கொலையாளிகளுடன் தொடர்புடைய நபர்கள் யாரேனும் உறுப்பினராக உள்ளனரா? என்பன பற்றிய விவரங்கள் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை. இந்த சோதனை மற்றும் விசாரணை நேற்று மாலை 5 மணிக்கு மேலும் நீடித்தது.
தஞ்சை, கும்பகோணத்தில் விசாரணை
நேற்று முன்தினம் திருபுவனத்திற்கு சென்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்களுடைய விசாரணையை தொடங்கினர். 2-வது நாளான நேற்று இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேரின் குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள், அவர்களது உறவினர்கள் வீடுகள் என கும்பகோணம் மேலக்காவிரி, திருபுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தினர்.
மேலும் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக தஞ்சை-நாஞ்சிக்கோட்டை ரோட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி அலுவலகத்திலும் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையை நடத்தினர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடைபெற்றது.
Related Tags :
Next Story






