கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை: மார்ட்டின் வீட்டில் ரகசிய பணம்-தங்க கட்டிகள் ரூ.1,214 கோடிக்கு சொத்து ஆவணங்கள் சிக்கியது


கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை: மார்ட்டின் வீட்டில் ரகசிய பணம்-தங்க கட்டிகள் ரூ.1,214 கோடிக்கு சொத்து ஆவணங்கள் சிக்கியது
x
தினத்தந்தி 5 May 2019 5:30 AM IST (Updated: 5 May 2019 5:07 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில், ரகசிய அறைகளில் இருந்து கட்டு, கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகளையும், ரூ.1,214 கோடிக்கு சொத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை,

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஜி.என்.மில் பகுதியில் மார்ட்டினுக்கு சொந்தமான ஓமியோபதி மருத்துவ கல்லூரி, அதன் அருகில் நிர்வாக அலுவலகம் உள்ளது. சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலும் வீடு மற்றும் நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிலையில் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்கள் உள்பட 70 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டின் வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள். அப்போது கோவையில் உள்ள வீட்டில் ஒரு இடத்தில் படிக்கட்டு அமைக்கப்பட்டு ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த அறைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கட்டு, கட்டாக பணம் மற்றும் தங்க, வைர நகைகள் சிக்கியது. கட்டிலுக்கு அடியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அங்கும் பண கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் லாட்டரி விற்பனை மூலம் ஏஜெண்டுகளிடம் இருந்து இவர் ரூ.595 கோடி அளவுக்கு பணம் பெற்று இருப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.619 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணத்தை பல்வேறு பகுதிகளில் முதலீடு செய்து இருப்பதற்கான ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.1,214 கோடிக்கான ஆவணங்கள் அங்கு சிக்கியது.

ரூ.8 கோடியே 25 லட்சம் அளவுக்கு ரொக்கப்பணமும், ரூ.24 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளும், வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்தபோது, அதிலும் ஏராளமான ஆவண விவரங்கள் தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்ட்டின் நிறுவன அலுவலகத்தில் காசாளராகவும், அதிகாரியாகவும் பணியாற்றிய பழனிச்சாமியிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி மார்ட்டின் தொடர்பான விவரங்களை சேகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பழனிச்சாமி காரமடை அருகில் குட்டையில் பிணமாக மீட்கப்பட்டார். மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மார்ட்டின் நிறுவனத்தில் கட்டு, கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பிடிபட்டது, அவருடைய நிர்வாக அதிகாரி பழனிச்சாமி இறந்தது ஆகியவை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story