மாமல்லபுரம் கேளிக்கை விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டம் 7 பெண்கள் உள்பட 160 பேர் சிக்கினர்


மாமல்லபுரம் கேளிக்கை விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டம் 7 பெண்கள் உள்பட 160 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 7 May 2019 3:06 AM IST (Updated: 7 May 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அருகே தனியார் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற மதுவிருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள், மாணவர்கள் உள்பட 160 பேர் சிக்கினர்.

மாமல்லபுரம்,

சமீபகாலமாக போதை, மது விருந்து கலாசாரம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே மது விருந்து நடந்தது. இது தொடர்பாக மாணவர்கள் உள்பட பலர் சிக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திலும் மது விருந்து கொண்டாட்டம் நடந்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம் பகுதியில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் அனுமதி இல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்-லைன் மூலம் ரூ.1,000 கட்டணம் செலுத்தி சட்டவிரோதமாக ஆடல் பாடலுடன் கூடிய மதுவிருந்து நடைபெறுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பொன்னி தலைமையில், திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த கேளிக்கை விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஆடல் பாடலுடன் மது அருந்தி 7 பெண்கள் உள்பட 160 பேர் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர்.

உடனே அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களை 2 பஸ்கள் மூலம் மாமல்லபுரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், பலர் கல்லூரி மாணவர்கள் என்றும், சிலர் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

கேளிக்கை விடுதி சார்பில் ஆன்-லைனில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை பார்த்து ரூ.1,000 செலுத்திவிட்டு இந்த மதுவிருந்தில் கலந்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட 7 பெண்களும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருவதாகவும், ஆண் நண்பர்களுடன் இந்த மது விருந்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் பிடிபட்டவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அனைவரும் மாமல்லபுரத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்களிடம் உரிய ஆவணங்கள் பெற்று எழுதி வாங்கிக்கொண்டு பிடிபட்ட அனைவரையும் அறிவுரை கூறி போலீசார் விடுவித்தனர்.

இதற்கிடையே அனுமதியின்றி செயல்பட்டதாக கூறி கேளிக்கை விடுதிக்கு ‘சீல்’ வைக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று இரவு கேளிக்கை விடுதிக்கு ‘சீல்’ வைத்தனர்.

மேலும் மது விருந்து கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சென்னை அயனாவரத்தை சேர்ந்த பிரபு (வயது 34), விடுதி உரிமையாளர் தங்கராஜ், மேலாளர் ஜார்ஜ், விடுதி வரவேற்பாளர் சரவணகுமார், விடுதி ஊழியர்கள் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story