சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை: ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எனக்கும் பொருந்தும்’ அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு பேட்டி
சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தனக்கும் பொருந்தும் என்று கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு கூறினார்.
சென்னை,
சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு தனக்கும் பொருந்தும் என்று கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு கூறினார்.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி (அறந்தாங்கி தொகுதி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ப.தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களும் 7 நாட்களுக்குள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ப.தனபால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அன்றைய தினமே தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக சட்டசபை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு தடை
இந்த நிலையில், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு சம்பந்தப்படவில்லை என்றாலும், கோர்ட்டு தீர்ப்பு 3 பேருக்கும் சாதகமாகவே அமைந்தது. சபாநாயகர் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு (கள்ளக்குறிச்சி) தனது வக்கீல் மூலம் நேற்று சட்டசபை செயலாளருக்கு விளக்க கடிதம் ஒன்று அனுப்பினார். அதன்பின்னர், பிரபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைச்சர் கடத்தினாரா?
சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு, கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இது அந்த எம்.எல்.ஏ.க்கள் (கலைச்செல்வன், ரத்தினசபாபதி) மட்டுமின்றி, எனக்கும் பொருந்தும் என்பதை மேற்கோள் காட்டி சபாநாயகரிடம் விளக்கம் கொடுத்திருக்கிறேன். மேற்கொண்டு விளக்கம் வேண்டும் என்றால், எனக்கு மறுபடியும் தகவல் கொடுங்கள். அதற்கு உண்டான விளக்கத்தை நான் கொடுக்கிறேன். காலஅவகாசம் கொடுங்கள் என்று தெரிவித்திருக்கிறேன்.
அமைச்சர் சி.வி.சண்முகம் என்னை கடத்திச்சென்றுவிட்டார். அவருடைய கட்டுப்பாட்டில் நான் சென்றுவிட்டேன் என்று தவறான செய்திகள் பரவுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் ஊடக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறேன். அ.ம.மு.க.வுக்கு நான் ஆதரவு கிடையாது. ஆனால் சசிகலாவுக்கு ஆதரவாகவும், விசுவாசமாகவும் என்றைக்குமே இருப்பேன்.
ஆட்சி அமைய சசிகலாவே காரணம்
ஏனென்றால் இந்த ஆட்சி அமைவதற்கு சசிகலா தான் காரணம். அதேபோல ஜெயலலிதாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து, எம்.எல்.ஏ. என்ற வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தவரும் அவர் தான். அவருடைய மூலமாகத்தான் எனக்கு ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.
என்னை உருவாக்கியவர்களுக்கு என்றைக்கும் விசுவாசமாக இருந்து செயல்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். டி.டி.வி.தினகரன் என்னுடைய நலம் விரும்பியாக இருக்கிறார். அவர் என்னுடைய மனதில் உயர்வான இடத்தில் வைத்திருக்கும் ஒரு தலைவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story