அரவக்குறிச்சி தொகுதியில் வீதி வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்


அரவக்குறிச்சி தொகுதியில் வீதி வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்
x
தினத்தந்தி 8 May 2019 2:45 AM IST (Updated: 8 May 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் வீதி வீதியாக சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அரவக்குறிச்சி, 

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் வீதி வீதியாக சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வி.செந்தில்பாலாஜிக்கு ஆதரவுகேட்டு மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசார வேன் மூலம் பள்ளப்பட்டி பஸ் நிலைய பகுதிக்கு நேற்று காலை வந்தார். பஸ் நிலைய பகுதியில் நடை பயணமாக சென்று அங்கிருந்த பயணிகள் மற்றும் பஸ் நிலைய கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து அதன் அருகே உள்ள காய்கறி சந்தைக்குள் சென்று, அங்கு காய்கறிகள் விற்பனை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இளநீர் அருந்தினார்

அங்கு காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு பெண், ‘உங்களை தற்போது தான் நேரில் பார்க்கிறேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வுக்கு தான் வாக்களித்து வருகிறேன். எனவே இந்த முறையும் உதயசூரியனுக்கு ஆதரவு கொடுப்பேன்’ என்று ஸ்டாலினிடம் கூறினார். அப்போது ஸ்டாலின் கையெடுத்து கும்பிட்டபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் நடந்து சென்று அங்கிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு ஒரு மரத்தடியில் இருக்கையை போட்டிருந்த மக்கள், அதில் அமருமாறு ஸ்டாலினிடம் கூறினர். இதைத்தொடர்ந்து அங்கு அமர்ந்த ஸ்டாலினுக்கு டம்ளரில் இளநீர் வழங்கப்பட்டது. அதனை வாங்கி அருந்திய அவர் நன்றி தெரிவித்தார்.

செல்பி எடுக்க ஆர்வம்

பின்னர் ஆலமரத்தெரு, செல்லுமீரான் நகர் பகுதியில் நடந்து சென்றார். அங்கு வழிநெடுக காத்திருந்த மக்கள் ஸ்டாலினை பார்த்ததும் உற்சாகத்துடன் கையசைத்தனர். பதிலுக்கு அவரும் கையசைத்தார். அப்போது இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வந்து தங்களது செல்போன் மூலம் ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த குழந்தைகளிடம் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

மேலும் அவர் முஸ்லிம் மக்களிடையே வாக்கு கேட்டபோது, நேற்று ரமலான் மாதம் தொடங்கியதையொட்டி, அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை கூறினார். காலை 10.10 மணியளவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஸ்டாலின் புறப்பட்டார். 10.45 மணியளவில் மீண்டும் கரூரில் உள்ள ஓட்டலுக்கு வந்து ஓய்வெடுத்தார்.

4 கி.மீட்டர் தூரம் நடந்தார்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணியளவில் பள்ளப்பட்டி பஸ் நிலையத்தில் நடக்க தொடங்கினார். பின்னர் காய்கறி சந்தை, சொட்டல் தெரு, ஆலமரத்தெரு, செல்லுமீரான் நகர் பகுதியில் நடந்து சென்று 10.10 மணியளவில் அவர் தனது நடைபயணத்தை முடித்தார். மு.க.ஸ்டாலின் நேற்று 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

Next Story