கல்வித்துறைக்கு தனிச்சேனல்: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கல்வித்துறைக்கு தனிச்சேனல் ஏற்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பழனி,
கல்வித்துறைக்கு தனிச்சேனல் ஏற்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கல்வித்துறையில் மாற்றம்
பழனி முருகன் கோவிலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, சைக்கிள், புத்தகப்பை என 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் தமிழக கல்வித்துறை உள்ளது. இதற்கு பள்ளிக்கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மாற்றமே காரணம்.
ஸ்மார்ட் வகுப்பறை
தமிழகத்தில் இதுவரை 65 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே அதிகமான மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி அ.தி.மு.க. அரசு சாதனை செய்துள்ளது.
உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதம் ஆகும். ஆனால் தமிழகத்தில் 48.9 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்பட்ட சலுகைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக் கப்படும்.
7 ஆயிரம் காலிப்பணியிடங்கள்
6, 7, 8-ம் வகுப்பு மாணவர் களுக்கு 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட உள்ளது. நடமாடும் நூலகத்தில் உள்ள நடைமுறை சிக்கலால் மாணவர்கள் புத்தகங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து மாணவர்கள் மடிக்கணினிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் இணைய நூலகம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தேர்வு முடிவுகளுக்கு பிறகு கல்வித்துறைக்கு என பிரத்யேகமாக தனிச்சேனல் ஏற்படுத்தப்படும். இதுதவிர ரோபோட்டிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 7 ஆயிரம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். வருகிற கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






