புகாரை வாபஸ் பெற்றால் ரூ.3 கோடி வாங்கித்தருவதாக போலீசார் பேரம் பேசுகிறார்கள் மர்மமாக இறந்த மார்ட்டின் நிறுவன ஊழியரின் மனைவி குற்றச்சாட்டு
புகாரை வாபஸ் பெற்றால் ரூ.3 கோடி வாங்கித்தருவதாக போலீசார் பேரம் பேசுகிறார்கள் என்று மர்மமாக இறந்த மார்ட்டின் நிறுவன ஊழியரின் மனைவி குற்றம் சாட்டி உள்ளார்.
கோவை,
புகாரை வாபஸ் பெற்றால் ரூ.3 கோடி வாங்கித்தருவதாக போலீசார் பேரம் பேசுகிறார்கள் என்று மர்மமாக இறந்த மார்ட்டின் நிறுவன ஊழியரின் மனைவி குற்றம் சாட்டி உள்ளார்.
மார்ட்டின் நிறுவன ஊழியர் சாவு
கோவையை அடுத்த ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள வெள்ளக்கிணர் பிரிவை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவருக்கு கோவை உள்பட நாடு முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனத்தில் காசாளராக வேலை செய்த கோவை உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமியிடமும் (வயது 45) வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பழனிச்சாமி பிணமாக மிதந்தார். அவருடைய உடலை காரமடை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
3-வது நாளாக போராட்டம்
இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் தற்கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தற் கொலைக்கு தூண்டியதாக அடையாளம் தெரிந்த வருமானவரித்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 5-ந்தேதி பழனிச்சாமியின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பழனிச்சாமியின் மனைவி சாந்தாமணி மற்றும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நடந்தது. தனது கணவரின் உடலை ஆஸ்பத்திரி டாக்டர்கள் சரியாக பிரேத பரிசோதனை செய்யவில்லை என்றும், அவருடைய உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அப்போது தாங்கள் நியமிக்கும் டாக்டரும் உடன் இருக்க வேண்டும் என்றும் சாந்தாமணி கூறி உள்ளார். அதை யாரும் ஏற்கவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பழனிச்சாமியின் மனைவி சாந்தாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.3 கோடி வாங்கித்தருவதாக பேரம்
எனது கணவரின் சாவுக்கு மார்ட்டின் நிறுவனத்தினர் தான் முக்கிய காரணம். வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் மீண்டும் அவரை அழைத்துச்சென்றனர். 25 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் எனது கணவர் வேலை செய்து உள்ளார். எனவே ரகசியத்தை வெளியே சொல்லிவிடுவார் என்று நினைத்து அவரை கொலை செய்துவிட்டனர்.
தற்போது எனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக நான் புகார் தெரிவித்து இருப்பதால், அந்த புகாரை வாபஸ் பெறக்கோரி போலீசார் சிலர் என்னிடம் கூறுகிறார்கள். புகாரை வாபஸ் பெற்றால் ரூ.3 கோடி வரை வாங்கித்தருவதாக போலீசார் என்னிடம் பேரம் பேசுகிறார்கள். எனக்கு பணம் எதுவும் வேண்டாம், எனது கணவர் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தினால்தான் முழு தகவலும் வெளியே வரும். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
உயர் அதிகாரி விசாரணை
சாந்தாமணியிடம் பேரம் பேசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக தற்கொலை வழக்கு, தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான விசாரணையை சப்-இன்ஸ்பெக்டர் தான் நடத்துவார். ஆனால் இந்த வழக்கு விசாரணையை போலீஸ் துணை சூப்பிரண்டு மணி நடத்தி வருகிறார். அவர் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி.யில் பணியாற்றி உள்ளார். எனவே அவருக்கு எப்படி எல்லாம் விசாரணை நடத்த வேண்டும் என்பது மிகத்தெளிவாக தெரியும்.
இறந்துபோன பழனிச்சாமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருடைய இடதுகையில் மட்டும் ஒரு காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி அவருடைய உடலில் எவ்வித காயங்களும் இல்லை. சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்டு அவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். கோர்ட்டு உத்தரவிட்டால் எங்களிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களும் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story