மதுரை அரசு மருத்துவமனை ஐ.சி.யூ.வில் 5 பேர் பலிக்கு மின்தடை காரணம் இல்லை; டீன் விளக்கம்


மதுரை அரசு மருத்துவமனை ஐ.சி.யூ.வில் 5 பேர் பலிக்கு மின்தடை காரணம் இல்லை; டீன் விளக்கம்
x
தினத்தந்தி 8 May 2019 3:59 PM IST (Updated: 8 May 2019 3:59 PM IST)
t-max-icont-min-icon

மதுரை அரசு மருத்துவமனை ஐ.சி.யூ.வில் 5 பேர் பலியானதற்கு மின்தடை காரணம் இல்லை என டீன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை,

மதுரை அரசு மருத்துவமனை ஐ.சி.யூ.வில் உயிரிழந்த 5 பேரில் 3 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  அவர்கள், மதுரை மேலூரை சேர்ந்த மல்லிகா (வயது 55), திண்டுக்கல்லின் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் (வயது 60) மற்றும் விருதுநகரின் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (வயது 52) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

நேற்று மாலை மதுரையில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.  இதனால் மதுரை நகரில் மின்தடை ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து ஐ.சி.யூ.வில் இருந்த 5 பேர் மின்தடையால் உயிரிழந்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டது.  இதனால் அவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் மூத்த வருவாய் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் உடனடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், டீன் வனிதா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது.  ஆனால் இரண்டு ஜெனரேட்டர்களும் பழுதடைந்து ஓடவில்லை.  இதனால் அவற்றில் இருந்து மின்சாரம் பெறமுடியவில்லை.

எனினும், அவசரகால பேட்டரிகள் உதவியுடன் வென்டிலேட்டர்கள் இயக்கப்பட்டன என கூறினார்.  மின்தடையால் அவர்கள் உயிரிழந்தனர் என கூறுவது தவறு.  ஐ.சி.யூ.வில் மரணம் அடைந்த 3 பேரில் 2 பேர் மாரடைப்பினாலும் மற்றும் ஒருவர் நோய் தீவிரமடைந்தும் உயிரிழந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

Next Story