மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது - மு.க.ஸ்டாலின்
மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
மதுரை அரசு மருத்துவமனையில் செவ்வாய் கிழமை இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில் ஜெனரேட்டரும் பழுதடைந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவி செயல்படாததால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகவே 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மதுரை அரசு மருத்துவமனையின் டீன் வனிதாவுக்கு விளக்கம் கேட்டுள்ளதால் அவருக்குத் துறை ரீதியாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டீன் வனிதா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது. ஆனால் இரண்டு ஜெனரேட்டர்களும் பழுதடைந்து ஓடவில்லை. இதனால் அவற்றில் இருந்து மின்சாரம் பெறமுடியவில்லை.
எனினும், அவசர கால பேட்டரிகள் உதவியுடன் வென்டிலேட்டர்கள் இயக்கப்பட்டன என கூறினார். மின்தடையால் அவர்கள் உயிரிழந்தனர் என கூறுவது தவறு. ஐ.சி.யூ.வில் மரணம் அடைந்த 3 பேரில் 2 பேர் மாரடைப்பினாலும் மற்றும் ஒருவர் நோய் தீவிரமடைந்தும் உயிரிழந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம்.
எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை என பதிவிட்டுள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) May 8, 2019
அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை! pic.twitter.com/soX2h2j4Hl
Related Tags :
Next Story