வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் -ஸ்டாலின் அறிக்கை


வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் -ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 8 May 2019 7:11 PM IST (Updated: 8 May 2019 7:11 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனிக்கு மாற்றப்பட்ட 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஈரோட்டுக்கு அனுப்பப்பட்ட 20 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களையும் உடனடியாக திரும்பப் பெற தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட வேண்டும். 

ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு  செல்லப்பட்டது கண்டனத்திற்குரியது. அதிகாரிகளின் செயல்பாடு ஆளும்கட்சிக்கு ஆதரவாகவும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. தேர்தல் ஆணையம் சம்பந்தமே இல்லாததைப்போல் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது கவலை அளிக்கிறது.

46 வாக்குச்சாவடிகளில் தவறு என்ன என்பது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும். மறுவாக்குப்பதிவு பரிந்துரைத்த விவரங்கள்  அனைத்தையும் வெளியிட வேண்டும். மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடாத நிலையில் ரகசியமாக வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றது ஏன்?

தேர்தல் அதிகாரிகள் ஏதோ சில வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் போல நடந்து கொள்கிறார்கள். தலைமை தேர்தல் அதிகாரியின் பேட்டி ஒரு புதிய முறைக்கேட்டிற்கு அடித்தளம் அமைப்பது போல் உள்ளது. தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு தலைமை தேர்தல் அதிகாரி மிகவும் தடுமாறி நிற்கிறார்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில் தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நிகழ்கின்றன. மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியை நியமித்து, வாக்குப்பதிவு இயந்திரங்களையும் வாக்குப்பதிவு மையங்களையும் முழுமையான அளவிற்கு பாதுகாத்திட வேண்டும். 

வேட்பாளர் அல்லது அவர்களின் முகவர்களுக்கு தெரிவிக்காமல் எந்த வாக்குப் பதிவு இயந்திரங்களையும் இனி எந்தத் தொகுதிக்கும் மாற்றக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

மறுவாக்குப்பதிவிற்கு தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ள விவரங்கள் குறித்தும், அவர் கூறும் 46 வாக்குச்சாவடிகளில் தவறு என்ன என்பது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு மீதுள்ள நம்பிக்கையை திமுகவும், எதிர்க்கட்சிகளும் முற்றிலும் இழந்து விட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களையும், மையங்களையும் முழுமையாக பாதுகாக்க, சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story