விருத்தாசலம் அருகே பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்திக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்


விருத்தாசலம் அருகே பயங்கரம் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி குத்திக்கொலை மர்மநபர்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 9 May 2019 2:31 AM IST (Updated: 9 May 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி மர்மநபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி. இவர்களது மகள் திலகவதி(வயது 19). இவர் விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சுந்தரமூர்த்தி நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். கொளஞ்சி மயிலாடுதுறையில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டதால், திலகவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்தநிலையில் மாலையில் இவரது வீட்டிற்குள் திடீரென மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் திலகவதியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர், தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி அதேபகுதியை சேர்ந்த அவரது மாமா மகேந்திரன் என்பவருக்கு போன் செய்து தெரியப்படுத்தினார். இதையடுத்து அவர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து, திலகவதியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

திலகவதியை குத்திக்கொலை செய்தது யார்? ஒருதலைக்காதலால் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுந்தரமூர்த்தியின் முதல் மகள் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார். திலகவதி மட்டும் இவர்களுடன் இருந்து வந்தார். தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

Next Story