அன்னிய செலாவணி மோசடி வழக்கு; வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி


அன்னிய செலாவணி மோசடி வழக்கு; வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 9 May 2019 3:52 PM GMT (Updated: 9 May 2019 3:52 PM GMT)

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் சாட்சி விசாரணை முடிந்து விட்டது.

இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இந்த வழக்கிற்காக மே 13ந்தேதி ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த 2ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கில் இதுவரை சாட்சிகள் அளித்த சாட்சியங்கள் பற்றி சசிகலாவிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் இதேபோன்று நீதிபதியின் கேள்விக்கு பதிலளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதனை இன்று விசாரித்த நீதிபதிகள், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.  வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதிவு செய்யப்படும் பதில்கள் அடங்கிய ஆவணங்களை, பெங்களூரு சிறைக்கு அனுப்பி சசிகலாவின் கையெழுத்தை பெறவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Next Story