7 பேர் விடுதலை விவகாரம்: கவர்னர் விரைவில் முடிவு எடுக்க அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதில் கவர்னர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:-
சிறையில் தொடர்ந்து 28 வருடங்களாக வாடி கொண்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை, சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறேன். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைத்துவிட்டது.
கடந்த 8 மாதங்களாக முக்கியமான அந்த தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் மீது உரிய காலத்தில் உத்தரவு பிறப்பிக்காமல் தேவையில்லாமல் கவர்னர் தாமதப்படுத்தி வருவது வேதனைக்குரியது. 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டே தள்ளுபடி செய்திருப்பது, அவர்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை தோற்றுவித்திருக்கிறது. அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ் முடிவு எடுக்க, கவர்னருக்கு இனி எந்த தடையும் இல்லை. எனவே பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக கவர்னரை தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தடை விதிக்க முடியாது என்றும், இவ்விஷயத்தில் தமிழக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. எனவே அவர்களின் விடுதலையை கவர்னர் இனியும் தாமதிப்பது முறையல்ல. விதிகளை கடைபிடிப்பதற்கு பதிலாக கருணையை கடைபிடித்து சிறையில் உள்ள 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கவர்னர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்களின் ஒரு நாள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் அடுத்த சில நாட்களில் அவர்கள் விடுதலை காற்றை சுவாசிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. தமிழக அமைச்சரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியும், மோடி அரசின் முட்டுக்கட்டை காரணமாக கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உரிய அழுத்தத்தை கவர்னருக்கு தரவேண்டும். கவர்னரும், ஏற்கனவே தமிழக அரசு செய்த பரிந்துரையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை காரணமாக சிலர் கூறிவந்தனர். அந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக கவர்னர் முடிவு எடுப்பார் என்றும் கூறியுள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அந்த 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் உத்தரவிட வேண்டும். தமிழக மக்களின் உணர்வையும், தமக்குள்ள அதிகாரத்தையும் உணர்ந்து கவர்னர் இதில் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்.
சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-
இந்தியாவில் இதுவரை எப்போதும் இல்லாத வழக்கமாக ராஜீவ் காந்தி வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கேட்கும் புதிய நடைமுறையை கொண்டு வந்து, அவர்கள் சார்பில் வழக்கு தொடுத்து விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டார்கள். அந்த வழக்குகள் யாவும் தற்போது சுப்ரீம் கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இனியும் 7 பேரின் விடுதலையை தாமதப்படுத்துவதற்கு எவ்வித காரணமுமில்லை என்பது சட்டப்பூர்வமாக தெளிவாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, தமிழக கவர்னர் உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் தர வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அரசியல் அழுத்தங்களை கொடுத்து சாத்தியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அரசியல் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story