ராமலிங்கம் கொலை வழக்கு: மணப்பாறையை சேர்ந்தவரிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை
ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக மணப்பாறையை சேர்ந்தவரிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
திருச்சி,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். வாடகை பாத்திரக்கடை மற்றும் கேட்டரிங் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி மதமாற்றம் தொடர்பான பிரச்சினையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தற்போது, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே சிலர் கைதாகியுள்ள நிலையில், அதன் விசாரணையும் தீவிரமாகவே நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை
இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த முகமது பாரூக் (வயது 46) என்பவரின் வீட்டுக்கு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் வையம்பட்டி போலீசார் சென்றனர். அப்போது, வீட்டில் இருந்த முகமது பாரூக்கை விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து அவர்கள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
முகமது பாரூக்கிடம் விசாரணை நடத்திய பின்னரே அது குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக ஒருவரை தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றது மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story