ரூ.25 கோடி சொத்துக்காக என் மகனை கடத்தி விட்டார் : செந்தில் பாலாஜி மீது கரூர் பெண் புகார்


ரூ.25 கோடி சொத்துக்காக என் மகனை கடத்தி விட்டார் : செந்தில் பாலாஜி மீது கரூர் பெண் புகார்
x
தினத்தந்தி 11 May 2019 7:58 AM GMT (Updated: 11 May 2019 7:58 AM GMT)

ரூ.25 கோடி சொத்துக்காக என் மகனை கடத்தி விட்டார் என செந்தில் பாலாஜி மீது கரூர் பெண் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.

கருர்,

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர், ராமலிங்கம். இவரது மனைவி தெய்வானை (62). இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால், கோகுல் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில், ராமலிங்கம் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். இவர்களுக்கு  சொந்தமாக விவசாயத் தோட்டம், காலியிடம் என 25 கோடிக்கும் மேலாக சொத்து உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்து கோகுலை கடத்திச்சென்று, குடும்பச் சொத்தை எழுதி வாங்கியதாக அப்போது புகார் எழுந்தது. இது தொடர்பாக, கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது. 

விசாரணையின்போது கோகுல் வாக்குமூலம் அளித்தால், அது செந்தில் பாலாஜிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. கோகுல், கடந்த சில வருடங்களாக கோவையில் தங்கி பணியாற்றி வருகிறார். அவரது மனைவியும் மகனும் அங்கேயே உடன் உள்ளனர். இதனிடையே, தனது தாயாரைப் பார்க்க கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி கரூருக்கு வந்துவிட்டுச் சென்றவர், அதன்பின் மாயமாகி விட்டதாக சொல்லப்படுகிறது. கோவை வீட்டிலும் இல்லை. இதுதொடர்பாக கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில், 'என் மகனை காணவில்லை' என தெய்வானை புகார் அளித்துள்ளார். 

இந்தப் புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த 6-ம் தேதி ஆட்கொணர்வு மனு ஒன்றையும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தெய்வானை தாக்கல் செய்துள்ளார். வழக்கு விசாரணையின்போது, 'தனக்கு எதிராக சாட்சியமளித்தால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி, செந்தில் பாலாஜியும் அவரது அடியாட்களும் தான் தனது மகனை கடத்தி வைத்திருக்கக்கூடும். எனவே, எனது மகனையும் எனது சொத்தையும் மீட்டுத்தர வேண்டும்' என தெரிவித்தார்.

இந்நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேசிய தெய்வானை, "கடந்த 2011-ம் ஆண்டு என் மகனை கடத்திச்சென்றதோடு, எங்களது பூர்வீகச் சொத்தை எழுதி வாங்கினர். அதுபற்றிய எனது புகார்மீது இதுவரை நடவடிக்கை இல்லை. அதனால், ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தேன்" என்றார். 

Next Story