குற்ற வழக்குகளை மறைத்து போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தவர்களை நிராகரித்தது சரிதான் ஐகோர்ட்டு உத்தரவு


குற்ற வழக்குகளை மறைத்து போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தவர்களை நிராகரித்தது சரிதான் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 May 2019 7:30 PM GMT (Updated: 2019-05-12T00:14:21+05:30)

குற்ற வழக்குகளை மறைத்து போலீஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்தது சரிதான் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

தமிழ்நாடு சிறப்பு காவல் பணி விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு 2007-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதன்படி, காவல் துறை பணிக்கு விண்ணப்பித்தவர்கள், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் விடுதலை ஆகியிருந்தாலோ, விடுவிக்கப்பட்டிருந்தாலோ அவர்களையும் குற்றவழக்குடன் தொடர்புடையவராக கருத வேண்டும் என்றும், குற்றப்பின்னணி உள்ளவரா? என்று நடத்தப்படும் போலீஸ் விசாரணையின்போது, குற்ற வழக்கு நிலுவையிலிருந்து பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டால், அடுத்த முறை நடைபெறும் தேர்வில் கலந்துகொள்ள உரிமை கோரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில் ஐகோர்ட்டும் தமிழக அரசின் இந்த முடிவை உறுதி செய்தது.

இந்த நிலையில், 2017-ம் ஆண்டு காவலர் தேர்வு நடந்தது. அப்போது, குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்ட விண்ணப்பங்களையும், குற்ற வழக்குகளை மறைத்தவர்களின் விண்ணப்பங்களையும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்தது. இதை எதிர்த்து பலர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

காவல்துறை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்மையானவர்களாகவும், அப்பழுக் கற்ற குணநலன்களும் கொண்டிருக்க வேண்டும். குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களாக இருந்தால் காவல்துறை பணிக்கு அவர்கள் உகந்தவர்கள் அல்ல என்று பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

இதன்படி, குற்ற வழக்குகளை மறைத்து போலீஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்தது சரிதான். அதேசமயம் வழக்கு நிலுவையில் இருந்தால், அதன் விவரங்களை மறைக்காமல் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தால், அவர்களை தேர்வில் கலந்துகொள்ளவும், பணி நியமனம் வழங்குவது குறித்தும் தமிழக அரசு தான் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story