சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கு: நண்பரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை


சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கு: நண்பரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 May 2019 2:30 AM IST (Updated: 12 May 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில், அவருடைய நண்பரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றபோது மாயமானார்.

இதைத்தொடர்ந்து மாயமான முகிலனை கண்டுபிடிக்க சென்னை ஐகோர்ட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து முகிலனை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சார்பில் 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று உள்ளது. எனினும் முகிலன் குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் முகிலனின் நீண்டகால நண்பரும், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்தவரும், நெசவு தொழிலாளியுமான சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த நல்லசிவம் (வயது 58) என்பவரிடம் ஈரோடு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து நல்லசிவம் கூறுகையில், ‘சி.பி.சி.சி.ஐ.டி. போலீசார் என்னிடம் விசாரணை நடத்தியபோது, முகிலனுக்கும், உங்களுக்கும் எத்தனை ஆண்டு காலம் நட்பு? இளைஞர் முன்னணி அமைப்பில் இருந்தபோது எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள்? எந்தெந்த போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளர்கள்? எத்தனை முறை சிறை சென்றுள்ளர்கள்? முகிலன் காணாமல் போவதற்கு முன்பு உங்களை அவர் போனில் தொடர்பு கொண்டாரா? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர்,’ என்றார்.

Next Story