பிளஸ்-1, பிளஸ்-2 மொழி பாட திட்டங்களில் இருமொழி கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பிளஸ்-1, பிளஸ்-2 மொழி பாட திட்டங்களில் இருமொழி கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 11 May 2019 11:15 PM GMT (Updated: 2019-05-12T01:37:05+05:30)

பிளஸ்-1, பிளஸ்-2 மொழி பாட திட்டங்களில் இருமொழி கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

க.பரமத்தி,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனுக்கு ஆதரவு கேட்டு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், க.பரமத்தி ஒன்றியம் அப்பிபாளையம் ஊராட்சி மேட்டுக்கடை பகுதியில் வீதி, வீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து நேற்று திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த நிருபர்கள், பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை மட்டும் படிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு பள்ளி கல்வித்துறை பரிந்துரை அனுப்பியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் என்று பாட திட்டம் கொண்டுவரப்படும் என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் இணைந்த 6 பாட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு இருமொழி கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதனால் மொழி பாட திட்டங்களில் இருமொழி கொள்கை தொடரும். பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு 6 பாட திட்டங்கள் நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியானது, 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story