மு.க.ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் இடையே ரகசிய உறவு உள்ளது தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


மு.க.ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் இடையே ரகசிய உறவு உள்ளது தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 12 May 2019 12:00 AM GMT (Updated: 11 May 2019 8:46 PM GMT)

மு.க.ஸ்டாலின் - டி.டி.வி.தினகரன் இடையே ரகசிய உறவு உள்ளது என தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, தனக்கன்குளம் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. மக்கள் இயக்கம். மக்களுக்காக பாடுபடுகிற இயக்கம். ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால், இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித்தர அவர் பாடுபடுவார். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் அரசிடம் அணுகி தேவையான உதவிகளை பெற்றுத்தருவார்களா? என்றால் இல்லை.

இதுவரை எந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வாவது என்னை சந்தித்து தொகுதி பிரச்சினை குறித்து ஏதாவது கோரிக்கை வைத்தார்களா? இல்லவே இல்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் இந்த திட்டத்தை கொண்டுவருவேன், அந்த திட்டத்தை செயல்படுத்துவேன்’ என வாக்குறுதி அளிக்கிறார். இவர் எதிர்க்கட்சி தலைவராகத்தான் இருக்கிறார். இவரால் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்? என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.

ஏற்கனவே நடைபெற்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், தற்போது நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றிலும் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று அதிக பெரும்பான்மையுடன் தொடர்ந்து நல்லாட்சி நடைபெறும். நான் சாதாரண தொண்டனாக வந்து உங்களிடம் வாக்குகளை கேட்கிறேன். தலைவராக வரவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் தலைவராக வந்து வாக்கு கேட்கிறார். மக்களாகிய நீங்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றித்தருவதை எனது கடமையாக கருதி நான் பணியாற்றி வருகிறேன்.

கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கருணாநிதி மற்றும் தயாநிதி மாறன் குடும்பத்துக்கு மட்டும் 40 டி.வி. சேனல்கள் உள்ளது. இதில் சன் டி.வி குழுமத்தில் உள்ள சேனல்களை பார்க்க ரூ.56 கட்டணம் ஆகிறது. கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக சொல்லும் மு.க.ஸ்டாலின், இந்த சேனல்களின் கட்டணத்தை தள்ளுபடி செய்யலாமே. ஆனால் இதுபற்றி அவர் வாய்திறக்க மாட்டார். எனினும் தேர்தல் முடிந்த பிறகு கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும் என பேசி வருகிறார்கள். இது எடப்பாடி ஆட்சி அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சி. ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து உருவாக்கிய ஆட்சி இது.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் வெற்றி மூலம், ‘இந்த அரசை கவிழ்ப்பேன்’ என டி.டி.வி.தினகரன் பேசி வருகிறார். அவருக்கு அரசியல் அறிமுகம் வழங்கியதே அ.தி.மு.க. தான். தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க. வுக்கும் ரகசிய உறவு உள்ளது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அ.தி.மு.க ஓட்டுகளை அ.ம.மு.க. பிரிக்கும்போது தி.மு.க. வெற்றிபெறும் என்பது அவர்களது எண்ணம். அந்த எண்ணம் ஒருபோதும் மக்களிடம் எடுபடாது. வெளியில் எதிரிகள் போன்று தினகரனும், மு.க.ஸ்டாலினும் தாக்கி பேசுவதுபோல் பேசிக்கொள்கிறார்கள். உள்ளூர ரகசிய உறவு வைத்துக்கொள்கிறார்கள். அ.தி.மு.க.வை உடைக்கவும், அரசை கவிழ்க்கவும் நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

டி.டி.வி.தினகரன் 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க. கட்சியிலேயே இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான், இவர் கட்சிக்குள்ளேயே வருகிறார். இவர் கட்சியையும், ஆட்சியையும் அபகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார். தி.மு.க.வுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். அத்தனை சதித்திட்டங்களும் உங்கள் பேராதரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது.

மறைமுகமாக தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவும், அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். எனவே வாக்காளர்கள் நன்கு சிந்தித்து அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டிக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story