காரில் கடத்தும் முயற்சியில் சாலையில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பரிதாப சாவு


காரில் கடத்தும் முயற்சியில் சாலையில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பரிதாப சாவு
x
தினத்தந்தி 13 May 2019 3:11 AM IST (Updated: 13 May 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடி அருகே காரில் கடத்தும் முயற்சியில் சாலையில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொறையாறு,

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையத்தை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகள் கவியரசி (வயது 20), கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவரும், அவருடைய தோழிகளும் மீண்டும் கோவை செல்வதற்காக கடந்த 6-ந் தேதி இரவு 9.45 மணி அளவில் கேசவன்பாளையத்தில் இருந்து தரங்கம்பாடி பஸ் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரில் இருந்தவர்கள், காரை நிறுத்தாமலே அதன் கதவை திடீரென திறந்து கவியரசியை பிடித்து காருக்குள் இழுத்து கடத்தி செல்ல முயன்றனர். அவர்களுடைய பிடியில் இருந்து கவியரசி தப்பிக்க முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் இழுத்து சென்றது.

இதில் காரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் கவியரசி நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஆனாலும் அந்த கும்பல் காரை நிறுத்தாமல் கவியரசியை சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சாலையில் தரதரவென இழுத்து சென்றது. பின்னர் எதிரே ஒரு பஸ் வந்ததால் கவியரசியை விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது.

இந்த கொடூர சம்பவத்தில் படுகாயம் அடைந்த கவியரசி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கவியரசி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை பொறையாறு போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்தனர். இதை கண்டித்தும், கவியரசியை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் பொறையாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, பொறையாறு இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story