இமாச்சலபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க பரிந்துரை சுப்ரீம் கோர்ட்டு அனுப்பியது
இமாச்சல பிரதேச மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிக்கு, தமிழகத்தை சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக வி.ராமசுப்பிரமணியன், கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி பதவி ஏற்றார். ஐகோர்ட்டில் பணியாற்றும்போது ஏராளமான முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை பிறப்பித்தார். நீதித்துறையில் திறமையான நீதிபதி என்று பெயர் பெற்றார். இவர், சங்க இலக்கியங்கள் பலவற்றை நன்கு கற்றவர். தமிழ் ஆர்வலரான இவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் ஆவார்.
குழந்தைகளுக்கு ஒழுக் கத்தை கற்றுத்தரும் ‘ஆத்திச்சூடி’, ‘கொன்றைவேந்தன்’ பாடல்கள் எல்லாம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு கடுமையாக வேதனை அடைந்தார். இதுகுறித்து பல நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார்.
அதேபோல, சென்னை ஐகோர்ட்டில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களினால், அவர் மனவேதனை அடைந்தார்.
தெலுங்கானா நீதிபதி
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதி தன்னை வேறு மாநில ஐகோர்ட்டுக்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டார். இதன்படி அவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது, அவர் தெலுங் கானா மாநில ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நீதிபதி வி.ராம சுப்பிரமணியனை இமாச்சல பிரதேச மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.
இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சூர்யகாந்த், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார். அதனால், இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.
பரிந்துரை
இந்த நிலையில், இப்பதவிக்கு நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க கடந்த 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்தது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு, இந்திய ஜனாதிபதிக்கும், மத்திய சட்டத்துறைக்கும் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், இமாச்சல பிரதேச மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க எல்லா தகுதிகளையும் கொண்டவர். அதன்படி, அவரை தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி, நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை இமாச்சல பிரதேச மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 3 தலைமை நீதிபதிகள்
இதுபோல், டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.என்.பட்டேலையும், மத்தியபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நீதிபதி ஏ.ஏ.குரேஷியையும், தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நீதிபதி ஆர்.எஸ்.சவுகானையும் நியமிக்க மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.
Related Tags :
Next Story