நாடு முழுவதும் 720 ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தில் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ரெயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை,
ரெயில் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க ரெயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள 720 ரெயில் நிலைய வளாகத்திலோ அல்லது தண்டவாளத்தில் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரெயில் நிலையங்களில் குடிநீர், தூய்மை மற்றும் எரிபொருள் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தெற்கு ரெயில்வேயில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையம் உள்பட 19 முக்கிய ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சென்னை புறநகர் ரெயில் நிலையங்களான தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், காட்பாடி, பெரம்பூர், ஜோலார்பேட்டை, மாம்பலம், கூடுவாஞ்சேரி, பெருங்குளத்தூர், திருத்தணி, சிங்கம்பெருமாள் கோவில், சென்னை கடற்கரை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story