ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பணம் பெற்றாரா? கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பணம் பெற்றாரா? கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 14 May 2019 10:00 PM GMT (Updated: 14 May 2019 7:45 PM GMT)

ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து பணம் பெற்றாரா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று கூறுகிறார். இந்தியா மதசார்பற்ற நாடாக விளங்கி வரும் வேளையில், மதத்தை புகுத்தும் வகையில் பேசுவது இந்துக்களை வம்புக்கு இழுக்கும் வேலை. இதனை செய்யக்கூடாது. யாரை திருப்திபடுத்துவதற்காக இதனை செய்கிறார். கமல்ஹாசன் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து பணம் வாங்கி விட்டாரா? இதுகுறித்து அவரிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தவேண்டும்.

அவர், தான் செய்த தவறை உணர்ந்து விட்டால், நான் சொன்ன கருத்தை வாபஸ் பெற்றுவிடுவேன். எனக்கு யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. அவர் அதனை ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதே வார்த்தையை மாற்று மதத்தை சேர்ந்தவர்களை பற்றி பேசமுடியுமா?

தகுதி இல்லாதவர்

இந்துக்களையும், இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதையே சிலர் வாடிக்கையாக வைத்து உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வீரமணி, சில தி.மு.க. பேச்சாளர்கள் வரிசையில் கமல்ஹாசனும் சேர்ந்து உள்ளார். கமல்ஹாசன் பேசியது சரிதான் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். அவர் தமிழ்நாட்டில், இந்தியாவில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர். அவர் இத்தாலிக்கு தான் செல்ல வேண்டும்.

இந்துக்களை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டு இந்தியாவில் இருப்பது மடத்தனம். வீரமணி திமிர் பேச்சை அடக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் அடக்குவார்கள். நான் பதவி பிரமாணத்தின் போது எடுக்கப்பட்ட எந்த உறுதி மொழியையும் மீறவில்லை. கமல்ஹாசன் பேசியது நியாயம் கிடையாது. அதனை திருத்திக்கொள்ள வேண்டும். அவர் மீது வழக்கு தொடருவது தொடர்பாக முதல்-அமைச்சர்தான் முடிவு செய்வார்.

அருகதை கிடையாது

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதநல்லிணக்க ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. கமல்ஹாசனின் கட்சி தடை செய்யப்பட வேண்டிய கட்சி என்பது எனது கருத்து. இந்திய தேர்தல் ஆணையம் இது போன்ற கட்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு அருகதை கிடையாது.

மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் பச்சோந்தி. தி.மு.க.வை நம்பி செல்கிறவர்களை நடுத்தெருவில் விட்டு சென்று விடுவார். தற்போது ராகுல்காந்தி நடுத்தெருவில் உள்ளார். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்று வெறிபிடித்து உள்ளார். அதற்கு அவர் ஒரு சினிமா படம் எடுத்து, அதில் முதல்-அமைச்சராக நடித்து விட வேண்டியதுதான். வேறு வழி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story