கோர்ட்டில் இருந்து வெளியே வந்த 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு 4 பேருக்கு வலைவீச்சு
கோவையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது.
கோவை,
கோவையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. கோர்ட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிறையில் அடைப்பு
கோவை கணபதி காமராஜர்புரத்தை சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் பிரதீப் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முன்விரோதம் காரணமாக கணபதி சங்கனூர் சாலையில் சந்தோஷ்குமார் (25) என்பவரை கத்தியால் குத்திய வழக்கில் பிரதீப் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், ராஜேஷ் ஆகிய 3 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிபந்தனை ஜாமீன்
இந்த வழக்கில் பிரதீப்புக்கு கடந்த மாதம் 29-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்பேரில் அவர் கோவை 2-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தினமும் காலையில் கையெழுத்து போட்டு வந்தார்.
வழக்கம்போல நேற்று காலை பிரதீப், தனது நண்பர் தமிழ்வாணன் (21) என்பவருடன் ஸ்கூட்டரில் கோவை கோர்ட்டுக்கு வந்தார். அங்கு கையெழுத்து போட்டு விட்டு கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை பிரதீப் ஓட்டினார். தமிழ்வாணன் பின்னால் உட்கார்ந்திருந்தார்.
அரிவாள் வெட்டு
அவர்கள் கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே வந்து 100 அடி தூரத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுரோட்டில் ஒருவர் அரிவாளுடன் ஓடிவந்தார். அவரை பார்த்து பதறிப்போன பிரதீப் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு தமிழ்வாணனுடன் தப்பி ஓட முயன்றார். பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் ஒருவர் அரிவாளுடன் ஓடிவந்தார். ஆயுதங்களுடன் நின்றவர்களை பார்த்ததும் அங்கு இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இதற்கிடையே 4 பேர் பிரதீப் மற்றும் தமிழ்வாணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் சாய்ந்தனர். மீண்டும் எழுந்து ஓட முயன்றும் 4 பேரும் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்றனர்.
தனிப்படைகள் அமைப்பு
ரத்த வெள்ளத்தில் போராடிய 2 பேரும் காப்பாற்றும்படி சத்தம் போட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து உதவி செய்தார். பின்னர் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அரிவாளால் வெட்டியதில் தமிழ்வாணனின் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று மதியம் சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோவை மூர்மார்க்கெட் பகுதியை சேர்ந்த சதீஷ், சூர்யா, தனபால், ஹரி ஆகியோர் சேர்ந்து 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே, பிரதீப்பை வெட்டுவதற்காக மர்மநபர் அரிவாளை ஓங்கியதை அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு பெண் பார்த்து மயங்கினார். உடனே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் நிறுத்தி அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தார்.
Related Tags :
Next Story