‘சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது’ வைகோ பேட்டி


‘சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது’ வைகோ பேட்டி
x
தினத்தந்தி 15 May 2019 1:30 AM IST (Updated: 15 May 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

சந்திரசேகர ராவ்-ஸ்டாலின் சந்திப்பால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று வைகோ கூறினார்.

புதுக்கோட்டை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று புதுக்கோட்டைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இதேபோல 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. மேலும் 19-ந் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க. உறுதியாக வெற்றிபெறும்.

வருகிற 23-ந் தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவதற்கு அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டது. விடுதலைப் புலிகளுக்கான தடையை மேலும் 5 ஆண்டு காலம் மத்திய அரசு நீட்டிப்பு செய்தது அடிப்படை ஆதாரமற்றது. இது சட்டவிரோதமான தடை. இந்த தடையை எதிர்ப்பது என்பது ம.தி.மு.க.வின் நிலைப்பாடு ஆகும்.

மத்திய அரசின் கைப்பாவை

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாகதான் தூத்துக்குடியில் ஸ்டாலின் தங்கி உள்ள தனியார் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நடிகர் கமல்ஹாசன், கோட்சே குறித்து தெரிவித்த கருத்து தவறானதல்ல.

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து உள்ளார். இதனால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்பட போவதில்லை. தி.மு.க. தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக அவரிடம் எடுத்துக்கூறி விட்டது. ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையில் தொடர்ந்து கவர்னர் தவறு செய்து வருகிறார். சட்டவிரோதமாக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story