டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்க ரசீது கட்டாயம் மேலாண்மை இயக்குனர் உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யும்போது ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யும்போது ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுபானத்தின் பெயர், அளவு...
டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் மதுபானம் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதாக புகார்கள் தலைமை அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களை குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.), தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற குற்ற நடவடிக்கையை தடுக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, மதுபான சில்லரை விற்பனை கடைகளில் நடைபெறும் ஒவ்வொரு மதுபான விற்பனைக்கும் ரசீது கண்டிப்பாக வழங்க கடைப்பணியாளர்களை அறிவுறுத்த வேண்டும். அந்த விற்பனை ரசீதில் கடை எண், தேதி, மதுபானத்தின் பெயர், அதன் அளவு, அதன் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். மேலும், கடைப்பணியாளர் ரசீதின் மீது கையொப்பமிட வேண்டும்.
‘ஸ்வைப்’ கருவி
வணிக வளாகங்கள் உள்பட சென்னையில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் விற்பனை தொகையை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் பெறுவதற்காக ‘ஸ்வைப்’ கருவி வழங்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனையாளர் அல்லது மேற்பார்வையாளர் இவர்களில் யார் ‘ஸ்வைப்’ கருவி மூலம் விற்பனை செய்து ஒப்புகை சீட்டு வழங்குகிறார்களோ, அவர் அந்த ஒப்புகை சீட்டின் பின்புறம், எந்த மதுபானம் விற்பனை செய்ததற்கு அந்த ஒப்புகை சீட்டு கருவியில் இருந்து பெறப்பட்டது என்பதை எழுத வேண்டும். அதாவது மதுபானத்தின் பெயர், அதன் அளவு, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தேதி ஆகிய விவரங்களை கண்டிப்பாக எழுத வேண்டும்.
ஏடுகளை பராமரிக்க வேண்டும்
‘ஸ்வைப்’ கருவியில் இருந்து பெறப்பட்ட ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தொகையும், மதுபானத்தின் விற்பனை விலையும் வேறுபட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட கடைப்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கடைகளிலும் ஒவ்வொரு நாளும் என்னென்ன அளவு கொண்ட மதுபானங்கள் எவ்வளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாக அதற்குரிய ஏடுகளில் பதிவு செய்ய வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை கடைபிடிக்க தவறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story