சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் குளறுபடி: சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. அதிரடி மாற்றம்


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் குளறுபடி: சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 16 May 2019 5:03 AM IST (Updated: 16 May 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த குளறுபடியையொட்டி, சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார்.

சென்னை, 

கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முடிவை சமீபத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வு எழுதிய சென்னை உளவுப்பிரிவு போலீஸ்காரர் அருணாச்சலம் தேர்வாகவில்லை. தான் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் கணக்கு சம்பந்தப்பட்ட கேள்வி ஒன்றில் தான் சரியான விடை எழுதி இருப்பதாகவும், ஆனால் அதனை தவறு என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் நிராகரித்து விட்டதாகவும் போலீஸ்காரர் அருணாச்சலம் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.

ஐகோர்ட்டு கண்டனம்

போலீஸ்காரர் அருணாச்சலம் எழுதிய விடை சரியானது தானா? என்று சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழுவை வைத்து சரிபார்க்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் ஐ.ஐ.டி.பேராசிரியரை வைத்து அருணாச்சலம் எழுதிய விடையை சரிபார்த்ததாகவும், அந்த விடை தவறு என்று ஐ.ஐ.டி. பேராசிரியர் கூறியிருப்பதாகவும் சீருடை பணியாளர் தேர்வாணையம் ஐகோர்ட்டில் பதில் மனுவில் தெரிவித்தது.

அதை அடிப்படையாக வைத்து போலீஸ்காரர் அருணாச்சலம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் போலீஸ்காரர் அருணாச்சலம் ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூர்த்தி என்ற ஐ.ஐ.டி. பேராசிரியர் மூலம் நான் எழுதிய விடையை சரிபார்த்ததாக கூறியுள்ளனர் என்றும், ஆனால் மூர்த்தி என்ற பெயரில் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் யாரும் வேலை பார்க்கவில்லை என்றும், சீருடை பணியாளர் தேர்வாணையம் ஐகோர்ட்டில் தவறான தகவலை கொடுத்துள்ளதாகவும் அருணாச்சலம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

உண்மையில் மூர்த்தி என்பவர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக வேலை பார்க்கவில்லை என்று தெரிய வந்தது. அவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.

சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இந்த செயலுக்கு சென்னை ஐகோர்ட்டு கடுமையான கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐ.ஜி.மாற்றம்

இந்தநிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் நேற்று மாலை அதிரடியாக மாற்றப்பட்டார். தேர்தல் கமிஷன் அனுமதியை பெற்று செந்தாமரை கண்ணன் மாற்றப்பட்டதாக தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

செந்தாமரை கண்ணனுக்கு புதிய பதவி எதுவும் கொடுக்கப்படவில்லை. கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த குளறுபடியையொட்டி, ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக ஐ.ஜி.யாக பணியாற்றும் வித்யா ஜெயந்த் குல்கர்னி, சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் புதிய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

Next Story