மழைக்காக யாகம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: மத நம்பிக்கையில் தலையிட முடியாது ஐகோர்ட்டு உத்தரவு
கோவில்களில் மழைக்காக யாகம் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, மத நம்பிக்கை தொடர்பான விஷயத்தில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை மற்றும் பல மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.
இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரியும், கோவில்களில் மழைக்காக நடந்து வரும் யாகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
தலையிட முடியாது
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இதுபோன்ற யாகம் நடத்த அரசே பணம் ஒதுக்குவது சட்டவிரோதமானது. அதுவும், யாகம் நடத்த வேண்டும் என்று இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க இந்துசமய அறநிலையத்துறைக்கு அதிகாரமும் கிடையாது’ என்று வாதிட்டார்.
இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம் நடத்தலாம் என்று குறிப்புகள் உள்ளன’ என்று வாதிட்டார்.
இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், ‘தமிழக ஜோதிடர்களை போல் அடுத்த 5 மாதங்களில் ஏற்படும் கிரகணம் போன்ற வானவியல் நிகழ்வுகளை மேற்கத்திய ஜோதிடர்களால் கணிக்க முடியுமா?’ என கேள்வி எழுப்பினர். பின்னர், ‘யாகம் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகிறது. இதுபோன்ற மத நம்பிக்கை தொடர்பான விஷயத்தில் தலையிட முடியாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story