மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் எத்தனை பதிவாகின? தேர்தல் கமிஷனுக்கு, ஐகோர்ட்டு கேள்வி + "||" + How many posts have been posted? The Election Commission has questioned the Court

நாடாளுமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் எத்தனை பதிவாகின? தேர்தல் கமிஷனுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

நாடாளுமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் எத்தனை பதிவாகின? தேர்தல் கமிஷனுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டு படிவங்கள் எத்தனை? அதில் எத்தனை ஓட்டுகள் பதிவாகின? என்று தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணியில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். இவர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் விதமாக தபால் ஓட்டுகள் மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டுக்கான படிவங்கள் முறையாக வழங்கப்படவில்லை. கொடுக்கப்பட்ட படிவங்களில் சிறு சிறு தவறுகளுக்காக நிராகரிக்கப்பட்டன. அண்மை காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தியில் உள்ளதால், அவர்கள் தங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்ற காரணத்துக்காக தபால் ஓட்டுகள் போட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பாரபட்சமான செயல்

அந்தவகையில் சுமார் 1¼ லட்சம் பேருக்கு தபால் ஓட்டு படிவங்கள் வழங்கப்படவில்லை. தமிழக காவல்துறையில் சுமார் 90 ஆயிரம் பேர் முறையாக தபால் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆனால் அரசு ஊழியர்கள் எத்தனை பேர் முறையாக தபால் ஓட்டுகளை போட்டுள்ளனர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. இதன்மூலம் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 23-ந்தேதி எண்ணப்படுகிறது. அன்று காலை 6 மணி வரை அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய முடியும். எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு, வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான படிவங்களை முறையாக வழங்கி, அனைவரையும் வாக்களிக்க செய்து, அந்த வாக்குகளையும் சேர்த்து எண்ண இந்திய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

எத்தனை ஓட்டுகள்?

இந்த வழக்கை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.அருண் ஆஜராகி, “தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என திட்டமிட்டே தபால் ஓட்டு படிவங்கள் வழங்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். இதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “ஒவ்வொரு வாக்காளருடைய வாக்கும் மிகவும் முக்கியமானது.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டு படிவங்கள் எத்தனை?. அதில் எத்தனை ஓட்டுகள் பதிவாகி உள்ளன? என்ற விவரங்களை தேர்தல் கமிஷன் நாளை (வெள்ளிக் கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை