திருவொற்றியூர்-மணலி சாலையில் பக்கிங்காம் கால்வாய் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றம்
திருவொற்றியூர்-மணலி சாலையில் பக்கிங்காம் கால்வாய் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர்-மணலி சாலையில் பக்கிங்காம் கால்வாய் மேம்பால பணிக்காக போக்குவரத்து மாற்றப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் மேம்பால பணி முடிவடையும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேம்பால பணி
திருவொற்றியூரில் இருந்து மாட்டுமந்தை மேம்பாலம் வழியாக மணலி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் கட்டுவதற்கான பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ரூ.42 கோடி செலவில் 530 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பால பணியை கடந்த 2018 டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.
ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி மந்தகதியில் நடந்து வருகிறது. மேலும் மேம்பால பணி நடைபெறும் இடத்தை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே இந்த கால்வாய் மேம்பால பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து மாற்றம்
இந்த நிலையில் இந்த கால்வாய் மேம்பால பணியை விரைவாக முடிக்க பக்கிங்காம் கால்வாய் மீது உள்ள பழைய மேம்பாலத்தை அகற்றி, அந்த இடத்தில் புதிய மேம்பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணியை தொடங்க உள்ளனர்.
இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி திருவொற்றியூரில் இருந்து மாட்டுமந்தை மேம்பாலம் வழியாக புதிய மேம்பாலம் பணி நடைபெறும் பகுதியை கடந்து மணலிக்கு செல்லக்கூடிய பாதை நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக திருவொற்றியூர் மற்றும் ஐ.ஓ.சி.க்கு சென்றுவரும் வாகனங்கள் கார்கில் நகர், பக்கிங்காம் கால்வாய் ஒட்டி உள்ள சாலையில் செல்ல மாற்று வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விரைவில் பணி முடியும்
தற்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. பக்கிங்காம் கால்வாய் மீது கட்டுமான பணியை தொடங்க உள்ளோம். அதற்காக தற்காலிகமாக இந்த வழியாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story